நீங்க என்ன ரஜினியா?.. ஓவராக பேசிய இயக்குநர்.. தரமான பதிலடி கொடுத்த விஷ்ணு விஷால்
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். திறமையான நடிகர் என்று பெயர் எடுத்த அவர்; கடைசியாக ஆர்யன், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. அடுத்ததாக கட்டா குஸ்தி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகியிருக்கிறது.
காவல் துறை அதிகாரியின் மகனான விஷ்ணு விஷாலுக்கு கிரிக்கெட்டர் ஆக வேண்டுமென்று ஆசை. ஆனால் அது நடக்கவில்லை. கால ஓட்டத்தில் சினிமாவுக்கு வரும்படி ஆகிவிட்டது.வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படம்மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அதற்கு அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சூப்பர் ஹிட்டான இன்று நேற்று நாளை: பெரும் திருப்புமுனைக்காக காத்திருந்த அவருக்கு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்கள் அமைந்தன. இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து உற்சாகம் கூடிய விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாச வித்தியாசமாக நடித்தார். அவை பெரியளவில் ஒர்க் அவுட்டும் ஆகவில்லை.
ராட்சசன், கட்டா குஸ்தி மெகா ஹிட்: அந்த படங்கள் சரியாக போகாததால் இனிமேல் விஷ்ணு விஷால் அவ்வளவுதான் என பலரும் சொன்னார்கள். அந்த சமயத்தில்தான் ராட்சசன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. தொடர்ந்து வந்த கட்டா குஸ்தியும் ஹிட்டாகின. இரண்டு படங்களும் வெவ்வேறு ஜானரில் வந்து விஷ்ணுவை மகிழ்ச்சிப்படுத்தின. விரைவில் ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது.
கட்டா குஸ்தி 2: இப்போது கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகிவருகிறது. முதல் பாகத்தில் இருந்த டீம் அப்படியே இதிலும் சேர்ந்திருக்கிறது. அந்தப் படம் போல் இதுவும் தரமான ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. சமீபத்தில்தான் அப்படத்திலிருந்து டீசரும், முதல் சிங்கிளான சம்பவக்காரியும் வெளியாகின. இரண்டுமே அனைவரையும் கவர்ந்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு ஒரு இயக்குநர் ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்ததுமே, ஹலோ என ரொம்பவே திமிராக சொல்லிவிட்டு, 'நீங்கள் என்ன ரஜினியா, கமலா, சூர்யாவா?.. இரண்டு முறை ஃபோன் செய்தும் ஏன் எடுக்க்வில்லை என கேட்டுவிட்டார். எனக்கு சுர்ரென்று ஏறிவிட்டது. உடனே நானும், 'சார் நீங்கள் மணிரத்னமா, ஷங்கரா இல்லை கௌதம் மேனனா? நான் ஏன் உங்கள் ஃபோனை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுவிட்டேன். நான் இப்படித்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications
