மகள் வாங்கிய உயரிய விருது.. ஆஸ்கர் மாதிரியாம்.. பெருமை பொங்க மனம் திறந்த ரோஜா
சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடிகைகளில் ஒருவர் ரோஜா. பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கும் அவர்; இப்போது லெனின் பாண்டியன் படத்தில் கேரக்டர் ரோலை ஏற்றிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க; அவரது மகள் அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் உயரிய விருது ஒன்றை பெற்றார். அதுகுறித்து பெருமையுடன் பேசியிருக்கிறார் ரோஜா.
ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரோஜா. அதற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக இருந்தார். தனது முதல் படத்தின்போதே செல்வமணியை காதலிக்க தொடங்கிவிட்டார் ரோஜா. அதனையடுத்து வீட்டு சம்மதத்துடன் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

நல்லதொரு குடும்பம்: திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறார் ரோஜா. அரசியலில் பிஸியாக இருந்தாலும் பிள்ளைகள் வளர்ப்பில் அவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. மகள் அன்ஷு மல்லிகாவை பொறுத்தவரை விஞ்ஞானத்தில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. அதற்குரிய அத்தனை செயல்பாடுகளிலும் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ரோஜாவும், செல்வமணியும் பெற்றோராக அத்தனை ஆதரவுகளையும் கொடுத்துவருகிறார்கள்.
மகள் வாங்கிய விருது: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் உயரிய விருதான, 'ஹெர்மன் பி வெல்ஸ்' என்ற விருது அன்ஷுவுக்கு கொடுக்கப்பட்டது. கல்வியில் மட்டுமின்றி தலைமைத்துவம், சமூக சேவைகளிலும் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளில் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்படுமாம். அதனை அன்ஷு பெற்றிருக்கிறார். மகள் பெற்றிருக்கும் விருதை பார்த்து உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் ரோஜாவும், செல்வமணியும்.
ரோஜா பேட்டி: இந்நிலையில் தனது மகள் பெற்ற விருது குறித்து சமீபத்தில் பிரபு அண்ணன் ராம்குமார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் ரோஜா. அந்தப் பேட்டியில் அவர், "எனது மகள் இண்டியானா பல்கலைக்கழகத்தில் டேட்டா சைன்ஸில் வாங்கியிருக்கிறார். அவர்கள் பல்கலைக்கழகத்தில் அது உயரிய விருது. அந்த யுனிவர்சிட்டியின் சுவற்றில் என்னுடைய மகளின் பெயரும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு மாணவரின் பெயர் இருக்கும். இந்த வருடத்தில் என் மகள் பெயர் வந்திருக்கிறது.
ஆஸ்கார் மாதிரியாம் அந்த விருது: அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் அம்மா என்று மகள் சொல்லிவிட்டார். மேலும், உங்கள் திரைத்துறையில் ஆஸ்கார் விருது மாதிரி என சொல்லி எனக்கு புரிய வைத்தார். அதற்கு பிறகு நாங்கள் நேரில் சென்றோம்" என்றார். ரோஜாவின் கரியரை பொறுத்தவரை இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் கேமரா முன் வர தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் லெனின் பாண்டியன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கும் அவர்; குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
