ரஜினிக்கு ஈகோவே இல்லை.. அப்போதே சொல்லிவிட்டேன்.. சிம்ரன் உச்சக்கட்ட மகிழ்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக ஆண்டவர் சிம்ரன். அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்ட அவர்; தெலுங்கிலும் தன்னுடைய கொடியை உயர பறக்க வைத்தார். திருமணமாகி சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர்; இரண்டாவது இன்னிங்ஸில் தரமான கேரக்டர்களாக, கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.இப்போது அவர் ரஜினியுடன் தர்மன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது பேட்டி சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தொகுப்பாளினியாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிம்ரன். கோலிவுட்டில் அவர் அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே கொடி உயர பறந்தது. அப்போது வளர்ந்து வந்த ஹீரோக்களாக இருந்த விஜய், அஜித் உள்ளிட்டோருடன் மாறி மாறி நடித்தார். அதேபோல் மறுபக்கம் கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜுன் என சீனியர் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். இதன் காரணமாக சிம்ரனின் அலைதான் பலமாக அடித்தது.

திருமணமாகி செட்டில்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர்; தன்னுடைய காதலர் தீபக் என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். திருமணத்துக்கு பின்பு சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் சூழல் ஏற்பட; முழுவதுமாக குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் நடிக்க குடும்பத்தின் சப்போர்ட் கிடைத்ததால்; இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
செம பிஸி சிம்ரன்: இரண்டாவது இன்னிங்ஸிலும் கதை மற்றும் கதாபாத்திர தேர்வில் ரொம்பவே கவனமாக இருந்து சிக்ஸர் அடித்துவருகிறார். அவர் நடித்திருந்த பேட்ட, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஈழ தமிழ் பேசி சிம்ரன் நடித்து அசத்தியிருந்தது அனைவரையுமே ரசிக்க வைத்தது. மேலும், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இப்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இரண்டாவது முறை: சிம்ரன் ஹீரோயினாக பீக்கில் இருந்தபோது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு ஒருமுறை அமைந்தது. ஆனால் சந்திரமுகி படத்தில் அது நடக்கவில்லை. பிறகு நடிக்காமலேயே முதல் இன்னிங்ஸை முடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி இல்லை; ஏற்கனவே பேட்ட படத்தில் நடித்திருந்தார். இப்போது இரண்டாவது முறையாகவும் பணியாற்றுகிறார். இதனால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சிம்ரன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "என்னுடைய ஃபேவரைட் நடிகர் ரஜினிதான். அப்புறம் விஜய், அஜித், பிரசாந்த், கமல், சூர்யா எல்லாம். தர்மன் படத்தில் வேலை செய்வது மிக்க மகிழ்ச்சி. நான் அவருடைய வெறித்தனமான ரசிகை. அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை. ஈகோவெல்லாம் அவருக்கு இல்லை. கீழே வந்து பழகுவார். பேட்ட படம் ஒரு டீசர்தான். அந்தப் படத்தில் வேலை செய்ததைவிட அதிகம் வேலை செய்ய வேண்டும் என ரஜினியிடம் சொல்லியிருந்தேன். கமலின் தயாரிப்பு, ரஜினி ஹீரோ என்பது பெரிய காம்பினேஷன். அதில் ஒரு பார்ட்டாக நான் இருப்பது மகிழ்ச்சி" என்றார். அவரது இந்தப் பேட்டி ரஜினி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து சென்சேஷனல் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications

