காஜல் அகர்வாலைவிட அழகுனு பெயர் வாங்கியும்.. ஹீரோயினாக நடிக்காத நீலிமா ராணி.. அவரே சொன்ன காரணம்
சென்னை: நீலிமா ராணி சின்னத்திரையில் ரொம்பவே ஃபேமஸ். அழகும், திறமையும் வாய்ந்த அவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் நான் மகான் அல்ல திரைப்படம் முக்கியமானது. கார்த்திக்கு தோழியாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தவர். மேலும் பல படங்களில் சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏனோ ஹீரோயினாக நடிக்காமலேயே போய்விட்டார். இந்நிலையில் அவரது பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீலிமா ராணி. அதனையடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தோன்றியவர்; வளர்ந்த பிறகு சின்னத்திரையிலும் அறிமுகமானார். சின்னத்திரை அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரையில் பல நெடுந்தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் நீலிமா.

சக்தி கேரக்டர்: அப்படி அவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. மெட்டி ஒலி சக்தி கேரக்டர் அவரது திறமையை காண்பிக்க நல்ல தொடக்கமாக அமைந்தது. ஒருபக்கம் சீரியல்களில் பிஸியாக நடித்துவந்த அவர் மறுபக்கம் திரைப்படங்களிலும் தலை காண்பிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இசையுடன் காதல், திருமணம்: இவற்றில் சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் அவர் நடிப்பதற்கான ஓரளவு ஸ்பேஸ் கிடைத்தது. கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த ஆகஸ்ட் 16 1947 படத்தில் நீலிமாவின் நடிப்பு பெரிதளவு இருந்தது. ஆனால் அந்த அளவு பேசப்படவில்லை. அது கொஞ்சம் அவருக்கு அப்செட்டை கொடுத்திருக்கும்தான். இதற்கிடையே அவர் இசை என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
கடனாளிகள்: இரண்டு பேரும் தயாரிப்பில் இறங்கி; பாதியிலேயே நின்ற படத்தால் கடனாளி ஆனார்கள். எப்படியோ அந்த நான்கு கோடி ரூபாய் கடனை சமீபத்தில்தான் அடைத்து முடித்தோம் என நீலிமாவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அவர் படம் தயாரித்தாலும் ஹீரோயினாக நடிக்கவே இல்லை. இத்தனைக்கும் அவரிடம் அந்த அழகும், திறமையும் இருக்கிறது. இந்நிலையில் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
நீலிமா ராணி பேட்டி: தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் எல்லா சீக்ரெட்டையும் வெளியே சொல்கிறேன். நான் மகான் அல்ல படத்தில் வரும் வா வா நிலவ புடிச்சு தரவா பாடல் ஷூட்டிங்கில் இருந்தோம். அங்கே கூட்டம் நிறைய இருந்தது. அந்த சமயத்தில் ஒரு பெரியவர் என்னிடம் வந்து, 'ஏன் மா நீ இவ்வளவு அழகா இருக்க; அந்தப் பெண்ணை ஹீரோயினா போட்டிருக்காங்களே; உன்னை போட்டிருக்கலாமே' என கூறிவிட்டார். உடனே நான், ' அய்யய்யோ இவர் என் பிழைப்பை கெடுத்துவிடுவார் போல' என நினைத்தேன். அன்றுதான் காதுபட கேட்டேன்.
முயற்சிகள் நடந்தன: நிறைய பேர் அப்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதய திருடன் திரைப்பட சமயத்தில்தான் மழை பிளான் செய்துகொண்டிருந்தார்கள். ஏன் நீங்கள் ஹீரோயினாக நடிக்கக்கூடாது என கேட்டார்கள். நாம் அந்த இடத்துக்கு சரியான ஆள் இல்லை என்பது நமக்கு தெரியும். ஏன் நம்முடைய பலமும், பலவீனமும் நமக்குதானே தெரியும். என்னால் அதை செய்ய முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications

