மம்மூட்டிக்கு 4வது தேசிய விருது.. 2 விருதுகளை அள்ளி 'பிரம்மயுகம்' அசுர சாதனை!
சென்னை: மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரம்மயுகம். மாந்திரீகத்தை மையமாக வைத்து ஹாரார் பாணியில் உருவான இந்த படத்தில் கொடுமன் என்கிற ரோலில் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படம் உலக அளவில் நல்ல வசூலை அள்ளியது.இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரம்மயுகம்: அதில், நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் 'ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள், 'பிரமயுகம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டிற்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்று கௌரவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த ஒளிப்பதிவிற்கு ஷெஹ்னாத் ஜலால் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'கொடுமன் போற்றி' என்ற கதாபாத்திரத்தில் தனது அசாத்தியமான மற்றும் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய திரு. மம்மூட்டி அவர்களுக்கும், தனது விதிவிலக்கான காட்சித் திறமையால் (Visual Craftsmanship) படத்தை மெருகேற்றிய திரு. ஷெஹ்னாத் ஜலால் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் பங்களிப்பு இப்படைப்பின் கலைநயத்திற்கும், அதன் தாக்கத்திற்கும் மிக முக்கிய தூணாக அமைந்தது.

இரண்டு தேசிய விருது: இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய திரைப்பட விழாக்களின் இயக்குநரகம், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் , தேசிய திரைப்பட வளர்சிக் கழகம் மற்றும் 72-வது தேசிய திரைப்பட விருதுகளின் மரியாதைக்குரிய நடுவர் குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், 72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகள் நாடு முழுவதும் உள்ள திரைப்பட படைப்பாளிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பதோடு, இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்துகிறது.
அனைவருக்கும் நன்றி : இந்த இரண்டு தேசிய விருதுகளும் 'நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்' மற்றும் 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒரு பெருமிதமான மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான, கலாச்சார ரீதியாக வேரூன்றிய மற்றும் உலகளாவிய ரீதியில் எதிரொலிக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் எங்களுக்கிருக்கும் கூட்டு அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 'பிரமயுகம்' திரைப்படம் வெளியானதில் இருந்தே இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பரவலான விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவின் 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட்டதுடன், 2024-ஆம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளிலும் பல விருதுகளை வென்று, தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.
நான்கு தேசிய விருது: மலையாள நடிகரான மம்முட்டி இதுவரை 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார் 1989 ஆண்டு ஒரு வடக்கன் வீரகாதா படத்தில் நடித்ததற்காக முதல் தேசிய விருதை பெற்றார். அதைத் தொடர்ந்து பொந்தன் மட, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படத்திற்கும் தேசிய விருதை பெற்றார். தற்போது நான்காவது முறை பிரம்மயுகம் படத்திற்கு விருதை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications
