ஒய் திஸ் கொலவெறி பாட்டு 3 படத்துக்கு உதவவே இல்ல.. ஐஸ்வர்யா என்ன இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் நேற்று வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ஐஸ்வர்யாவின் மேக்கிங் சொல்லிக்கொள்ளும்படிதான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினர். இந்தச் சூழலில் தனது முதல் படமான 3 படம் குறித்து ஐஸ்வர்யா பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள் என்ன டக்குனு ஐஸ்வர்யா இப்படி சொல்லிட்டாங்க என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களூக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார். இரண்டு பேரும் பிரிந்திருந்தாலும் இதுவரை விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
லால் சலாம் ஐஸ்வர்யா சூழல் இப்படி இருக்க அவர் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த், செந்தில், உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று வெளியானது. கிரிக்கெட்டையும், மத பிரச்னையையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது லால் சலாம். இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் நேற்று படம் பார்க்க சென்றிருந்தனர்.
Thalaivar 171: "லால் சலாம் சூப்பர்... அடுத்து நம்ம லோகேஷ் படம் தான்” ரஜினி சொன்ன தலைவர் 171 அப்டேட்
கலவையான விமர்சனம்: ஆனால் படமோ ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. படத்தில் திரைக்கதை சுமார்தான். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கூறும் ரசிகர்கள்; ரஜினிகாந்த் படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வந்தாலும் மனதில் நிற்கும்படி ஒரு காட்சிக்கூட இல்லை. அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் மாஸ் சீன்கள்கூட அரைத்த மாவையே அரைத்தது போல்தான் இருந்தது என்று ஓபனாகவே பேசியிருந்தனர்.
ஐஸ்வர்யா பேட்டி: முன்னதாக லால் சலாம் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த ஐஸ்வர்யா லால் சலாம் ரிலீஸ் ஆன பிறகு நானும் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ 3 திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒய் திஸ் கொலவெறி பாடல் அவ்வளவு பெரிய ஹிட் ஆனது எங்களுக்கே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அந்தப் பாடல் படத்தின் மீது அதீதமான அழுத்தத்தை கொடுத்துவிட்டது.
விழுங்கிவிட்டது: அந்தப் பாடல் 3 படத்தை விழுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை ஓவர் ஷேடோ செய்துவிட்டது. முக்கியமாக இந்தப் பாட்டு படத்தின் போக்கையே மாற்றிவிட்டதால் எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அந்தப் பாடல் படத்தின் வெற்றிக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை” என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஒய் திஸ் கொலவெறி: 3 படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பாடல்கள் மெகா ஹிட். குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஒலித்தது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கூட இந்தப் பாட்டை கேட்டு வெகுவாக ரசித்து தனுஷ் உள்ளிட்டோருக்கு விருந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடல் மூலம் 3 படத்துக்கு எக்கச்சக்க பப்ளிசிட்டி கிடைத்ததும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications