தர்மன் படத்தில் ரஜினிக்கு வைத்த முதல் ஷாட்.. ஸ்பாட்டிலேயே விசில் அடித்த இயக்குநர்.. சம்பவம் தரம்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தர்மன். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க; அனிருத் இசையமைக்கிறார். பெரிய இழுபறிக்கு பிறகு இந்தப் படத்தின் இயக்குநராக அஷ்வத் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசியிருக்கிறார் இயக்குநர்.
ரஜினியை வைத்து கமல் தயாரிக்கும் படத்தின் இயக்குநர்களாக முதலில் சுந்தர்.சியும், பிறகு சிபி சக்கரவர்த்தியும் கமிட் ஆனார்கள். அறிவிப்பெல்லாம் வந்ததுதான். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்கள் இரண்டு பேருமே வெளியேறிவிட்டார்கள். அவர்கள் வெளியேற்றத்தைத் தொடர்ந்து டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை இயக்குநராக ஓகே சொல்லிவிட்டார்கள் ரஜினியும், கமலும். அவர் சொன்ன கதை இரண்டு பேருக்குமே பிடித்துப்போனதால் ஒருமனதாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

படத்தில் யார்? யார்?: படத்தின் இசையை பொறுத்தவரை வழக்கம்போல் அனிருத்தான். நடிகைகளை பொறுத்தவரை இப்போதைக்கு சிம்ரனும், ராஷி கண்ணாவும் கமிட்டாகியிருக்கிறார்கள். ஏற்கனவே ரஜினியுடன் பேட்ட படத்தில் சிம்ரன் நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது. இவர்கள் தவிர்த்து மீனாட்சி சௌத்ரியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் என்றும்; அவர் கமிட்டாகியிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
தொடங்கிய ஷூட்டிங்: சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியிருக்கிறது. இதில் ரஜினி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தப் படம் தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மட்டுமின்றி பொறுப்பும்கூட என்பதில் அஷ்வத் தெளிவாக இருக்கிறார். எனவே இதற்கு முன்பு இயக்கிய டிராகன், ஓ மை கடவுளே ஆகிய படங்களைவிடவும் இதனை தரமான படமாக கொடுக்க வேண்டும் என அவர் உழைத்துவாருகிறார்.
அஷ்வத் மாரிமுத்து சொன்னது: இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து அஷ்வத் மாரிமுத்து ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், "தர்மன் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி நடந்து வருவது மாதிரிதான் முதல் ஷாட்டை வைத்தேன். அவர் தன்னுடைய ட்ரேட் மார்க் ஸ்டைலில் அப்படி நடந்து வந்தபோது என்னையும் அறியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விசில் அடித்துவிட்டேன்" என்றார். இதை பார்த்த ரசிகர்களோ, யப்பா அஷ்வத் வெறித்தனமான தலைவர் ரசிகரா இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
படம் எப்படி இருக்கும்?: முன்னதாக இந்தப் படம் குறித்து தொடக்க விழாவில் பேசிய அஷ்வத் மாரிமுத்து, 'இந்தப் படம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன். இந்தப் படத்தை நான் வேட்டையாடு விளையாடு, படையப்பா ஆகிய இரண்டு படங்களின் கலவையாக எனது ஸ்டைலில் கொடுப்பேன். பலரும் ரஜினி - கமல் இணையும் படத்தில் பணியாற்ற வேண்டும் என ஆசையோடு இருக்கிறார்கள். அவர்கள் சார்பில் இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொள்கிறேன்" என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
