முதலமைச்சரான விஜய்.. சட்டப்பேரவைக்குள் அட்லீ.. முன்னாள் அமைச்சர் இப்படி இழுத்து விட்டுட்டாரே
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்றே தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது. அதுமட்டுமின்றி ஆளுநர் தவெக ஆட்சியை புகழ்ந்தும் பேசினார். சூழல் இப்படி இருக்க கூடிய கூட்டத்தொடரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்; இயக்குநர் அட்லீ குறித்து பேசியதும்; அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்ததும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வமே இருந்தது. ஆளுநர் அர்லேகர் உரையுடன் நேற்று தொடங்கிய கூட்டத்தொடரில்; தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது. மேலும் திமுக உறுப்பினர்களோ முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையில், 'வாய திறங்க சி.எம், மாஸ்டர் வாயில் பிளாஸ்டர், திரையில் நாயகன் தரையில் வில்லன்' என்ற வாசகங்களோ பேட்ஜ்களை குத்திக்கொண்டும், பதாகைகளை ஏந்திக்கொண்டும் வந்தார்கள்.

இன்று நடந்தது: இப்படி நேற்றைய நிகழ்வுகள் முடிந்தன. இன்று என்ன மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் லைவ்வில் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்த்துவருகிறார்கள். இன்று பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 'அட்லீ எப்படி ஏற்கனவே ஹிட்டான படங்களிலிருந்து சிறந்த காட்சிகளை எடுத்து ஒரு படத்தை கொடுப்பாரோ; அதேபோல் திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் கொண்டு வந்த புதிய திட்டம் போல் சொல்கிறீர்கள்' என கூறினார்.
ராஜ்மோகன் பதில்: இதை கேட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'சிவசங்கர் முழுநேர அரசியல்வாதி. அவருக்கு அட்லீயை பற்றி தெரிந்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சிக்கும், அட்லீக்கும் என்ன சம்பந்தம். இந்தப் பேரவை தொடருக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். சட்டப்பேரவையில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் மாறிவிட்டது: எனவே தேவையில்லாத விஷயங்களை இங்கே பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்து காட்சிகளும், காலங்களும் இப்போது மாறிவிட்டன' என்றார். சட்டப்பேரவையில் அட்லீயின் பெயர் இழுக்கப்பட்டிருப்பது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் அண்ணா முதலமைச்சர் ஆனதும்; அட்லீயும் சட்டப்பேரவைக்குள் போய்விட்டாரே என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
விஜய் -அட்லீ நட்பு: முன்னதாக, நண்பன் பட சமயத்திலிருந்தே விஜய்யும், அட்லீயும் பழக்கம். ராஜா ராணிக்கு பிறகு அவர் இதுவரை தமிழில் இயக்கிய அத்தனை படங்களிலும் விஜய்தான் ஹீரோ. மேலும் விஜய்யை ஒரு ஹீரோவாக மட்டும் பார்க்காமல் தன்னுடைய உடன் பிறந்த அண்ணனாகவே பார்ப்பவர் அட்லீ. விஜய்யும் அவரை தன்னுடைய சகோதரர் ஸ்தானத்தில்தான் வைத்திருக்கிறார். அட்லீ வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் விஜய் தவறாமல் அங்கே ஆஜராகிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
