மனைவிக்கு உடல்நல குறைவு.. கூச்சமின்றி சிரித்த சல்லிப்பயல் நான்.. பிரபல இயக்குநர் உருக்கம்

சென்னை: தமிழில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் இரா. சரவணன். அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தன் மனைவி கலா குறித்து முகநூலில் வெளியிட்டிருக்கும் பதிவு படிப்பவர்களை கலங்க செய்திருக்கிறது. மனம் திறந்து அதில் கொட்டியிருக்கிறார் அவர்.

பத்திரிகையாளரான இரா.சரவணன் கத்துக்குட்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதிலும் நந்தன் திரைப்படம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் அவர் தன் முகநூல் பக்கத்தில் தன்னுடைய மனைவி கலா குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு கலங்கடிக்கிறது.

Director Ra Saravanan s Emotional Birthday Post for Wife Kala Moves the Internet
Photo Credit:

சரவணனின் பதிவு: அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கை ரொம்ப வலிக்குதுப்பா" என்றார் என் மனைவி கலா. பள்ளிக்கு பைக்கில் போய் வருவதால் வந்த வலியாக இருக்கலாம் என நினைத்தேன். இரவு சாப்பிடும்போது, "இன்னும் வலி தாங்கலப்பா... தோள் பட்டை வரைக்கும் வலிக்குது" என்றார். தாமதிக்காமல் மருத்துவர் விஜய் அவர்களைச் சந்தித்தேன். "இசிஜி எடுத்துப் பார்த்திடலாமே..." என்றார்.

Also Read
முதல் காதலை பற்றி அப்படி சொல்ல காரணம்?.. ஓபனாக போட்டுடைத்த வனிதா விஜயகுமார்
முதல் காதலை பற்றி அப்படி சொல்ல காரணம்?.. ஓபனாக போட்டுடைத்த வனிதா விஜயகுமார்

மருத்துவமனையில் நான்: கே.கே.நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குப் போனோம். பரிசோதனை செய்தவர்கள், "வேரியேஷன் அதிகமா தெரியுது... ஆனா, இங்க இப்போ டாக்டர் இல்லை. வேற ஹாஸ்பிடல் போயிடுறீங்களா?" என்றார்கள். மணி இரவு 11:30. தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே போட்டுப் பூட்டிவிட்டு, கீழ்ப்பாக்கம் குமரன் ஹாஸ்பிடல் போனோம். எமர்ஜென்ஸி வார்டில் சேர்த்தார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட சம்பிரதாயப் பரிசோதனைகளை முடித்தவர்கள், வெளியே இருந்த மருத்துவரிடம் போனில் பேசினார்கள். அதுவரை எனக்கு எவ்விதக் கலக்கமும் இல்லை.

மருத்துவர்கள் சொன்னது: இரவு 2 மணிவாக்கில், "ஆஞ்சியோ பண்ணிடலாம்னு டாக்டர் சொல்றார்" என்றார்கள். தயங்கி நின்றேன். "ஆஞ்சியோங்கிறது ஒரு பரிசோதனைதான். கால் மணி நேரத்தில் பண்ணிடுவாங்க. தயங்காதீங்க..." என்றார்கள். எப்போதும் கூட்டமாகவே நிற்கிற வழக்கம்கொண்ட நான் முதன் முறையாகத் தனியாக நின்றேன். அந்த நேரத்தில் எவரையும் அழைக்க முடியாது. கலாவும் தைரியமாகத்தான் இருந்தார். காலை 3.30
மணிவாக்கில் கலாவை உடை மாற்றச் சொல்லி செயின், தோடு, மூக்குத்தியைக் கழற்றிக் கொடுக்கச் சொன்னபோதுதான் எனக்குத் தடதடக்கத் தொடங்கியது. பிரத்யேக அறைக்குக் கலாவை அழைத்துச் செல்லச் செவிலியர்கள் வந்தார்கள்.

மனைவி சொன்னது: "புள்ளைங்க பத்திரம்க..." என்றபடி கலா என் கைகளைப் பிடிக்க, கண்ணணை உடைந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. என் அக்கா மகன் மணி ஓடிவர, கொஞ்சம் தைரியத்துடன் கலாவை உள்ளே அனுப்பி வைத்தேன். கால் மணி நேரம் என்றார்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என ஆகிக்கொண்டே இருந்தது. கலா வெளியே வரவில்லை. கொஞ்ச நேரத்துக்குள் இந்த மனம் எப்படியெல்லாம் அஞ்சி விடுகிறது. "மாமா..." என மணி என் தோளை அழுத்த, "அவளுக்குன்னு நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடா. வாழ்க்கை முழுக்க போராட்டத்தை மட்டுமே கொடுத்திருக்கேன்..." எனக் குலுங்கினேன்.

உடைந்து நொறுங்கினேன்: மருத்துவர் விஜய்க்கு மறுபடி மறுபடி போன் பண்ணிப் பினாத்தினேன். காலை 5 மணிவாக்கில் மகன் சஞ்சயிடமிருந்து போன். "அம்மா எங்கப்பா?" என்றான். இன்னும் உடைந்து நொறுங்கினேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கலா மயக்க நிலையில் வெளியே அழைத்து வரப்பட்டார். ஓடோடிப்போய் அவர் கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக் கொண்டேன். "இரண்டு இடங்களில் லேசான அடைப்பு. இப்போதைக்கு ஸ்டெண்ட் வைக்க அவசியமில்லை. மருந்து மாத்திரைகளே போதும்" என்றார் மருத்துவர் சித்தார்த். மகத்தானவர். கைக்கூப்பினேன்.

முடிவெடுத்தேன்: காலத்திற்கும் கலாவை திட்டாமல், குறை சொல்லாமல், படுத்தி எடுக்காமல், அவரை எந்த வேலையும் செய்யவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளத் திட்டமானேன். பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தேன். வீட்டு வேலைகளைச் செய்தேன். கோயிலுக்கு அழைத்துப் போனேன். நிறைய நேரம் கலா பேச்சுக்குக் காது கொடுத்தேன். நான்கைந்து நாட்களில் என் வேலைகள் துரத்த ஓடினேன்.

எப்படி தொலைத்தேன்: வேறொரு விஷயமாய் கலா பேச, போனிலேயே காச் மூச்செனக் கத்தினேன். அடுத்த சில நிமிடங்களிலேயே ஓடோடி வீடு வந்து மன்னிப்பு கேட்டுச் சமாதானப்படுத்தி விட்டாலும், கலாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நினைத்த மனநிலையை எப்படி தொலைத்தோம் என முட்டிக்கொண்டேன். அந்த ஆதங்கமும் சில மணி நேரம்தான்... பிறகு வேலைகள், பயணங்கள், சந்திப்புகள் என வழக்கமான வாழ்க்கையிலேயே ஓடத் தொடங்கினேன்.

பாத்திரம் கழுவும் சத்தம்: மருத்துவமனை சிரமங்கள் மறைந்து முழுதாக ஒரு மாதம்கூட ஓடவில்லை. நேற்றிரவு தாமதமாக வீடு போனேன். நல்ல தூக்கத்தில் இருந்த கலா எழுந்தார். உணவு எடுத்து வைத்தார். காபி கொடுத்தபோது மணி 11.40. நான் படுத்துவிட்டேன். அதன் பிறகும் அடுக்களையில் பாத்திரம் கழுவும் சத்தம். காலையில் 5:30 மணிக்கு எழுந்து கலா லைட் போட்டபோது, லேசாகக் கண் விழித்துப் புரண்டு படுத்தேன். 7:45க்கு நான் எழுந்தபோது வாசல் கூட்டிக்கொண்டிருந்தார் கலா.

பிறந்தநாள் வாழ்த்துகள்: அரக்கப் பறக்கத் துணி காய வைத்தார். அடுப்பில் உணவு கொதித்துக் கொண்டிருந்தது. "ஐயோ கூட்டுக்கு...?" என்றபடி நைட்டியோடு எதிர்க்கடைக்கு ஓடி வாழைக்காய் வாங்கிக்கொண்டு வந்தார். சில எஸ்.எம்.எஸ்.களுக்கு நான் பதில் அனுப்புவதற்குள் எப்படித்தான் சமைத்து, குளித்து, உடை மாற்றினாரோ... "சாப்பிட்றீங்களாப்பா..?" எனக் கேட்டார். 'வேணாம்' என்பதுபோல் தலையாட்டியவன், புதுச் சேலையில் கிளம்பி நின்ற கலாவின் கைகளைக் குலுக்கி, "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்பா..." என்றேன்.

"தாங்க்ஸ்ப்பா..." என்றபடியே லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் பைக் ஸ்டார்ட் செய்தார். "புள்ளைங்களுக்குத் தனியா பாக்ஸ்ல வெச்சுட்டேன். உங்களுக்கு டைனிங் டேபிள்ல இருக்கு. மறந்துடாம சாப்பிட்ருங்க. கவனம்..." என்றபடியே பைக்கில் பறக்கப் போனவர் முன்னால் நின்று மறித்தேன். "பிறந்த நாளை பெரிசா கொண்டாட நினைச்சேன். ஸாரிப்பா..." என்றேன். "நீங்க வாழ்த்துச் சொன்னதே பெருசுப்பா" எனச் சிரித்தார் கலா. கொஞ்சமும் கூச்சமின்றி பதிலுக்குச் சிரித்தான் சரவணன் என்கிற மகத்தான சல்லிப்பயல்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Read more about: kala nandhan director saravanan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X