Exclusive - லிங்கம் வெப் சீரிஸ் உருவானது எப்படி?.. இயக்குநர் லட்சுமி சரவணக்குமார் பிரத்யேக பேட்டி
சென்னை: கதிர், திவ்யபாரதி, போஸ் வெங்கட், பூர்ணிமா ரவி, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் லிங்கம். கபடி வீரராக இருந்த லிங்கம்; காவல் துறை அதிகாரியாக ஆசைப்பட்டு; சூழ்நிலைகளால் ரவுடியான உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துஉருவாக்கப்பட்டிருக்கும் வெப் சீரிஸ். இது ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அதன் இயக்குநர் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
தமிழ் இலக்கிய உலகத்தில் தவிர்க்க முடியாதவர் லட்சுமி சரவணக்குமார். உப்பு நாய்கள், கானகன், கொமோரா உள்ளிட்ட பல நாவல்களை எழுதியிருக்கும் அவர்; கானகன் நாவலுக்காக யுவபுரஸ்கார் விருதையும் வென்றவர். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதனை திருப்பி தந்து கவனம் ஈர்த்தவர். அவரது எழுத்துக்கள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. முக்கியமாக, அவரது கதைகளை படிக்கும்போதே காட்சிகளாக கண்ணில் விரியும் தன்மை கொண்டது.

இயக்குநர் ஆன எழுத்தாளர்: இலக்கிய உலகத்தில் இயங்கினாலும் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசையும் கொண்டிருந்தவர். வசந்தபாலன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் 2.0, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் பணியாற்றியவர். அவர் இப்போது கதிர், திவ்யபாரதி, போஸ் வெங்கட் உள்ளிட்டோரை வைத்து லிங்கம் வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். கபடி வீரராகவோ அல்லது காவல் துறை அதிகாரியாகவோ ஆகியிருக்க வேண்டிய நாகர்கோவிலை சேர்ந்த லிங்கம்; கால சூழ்நிலைகளால் ரவுடி ஆன உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
லட்சுமி சரவணக்குமார் பேட்டி: இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. பக்கா டீட்டெயிலிங்கோடு சீரிஸை இயக்கியிருக்கும் லட்சுமி சரவணக்குமாருக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு உரையாடலை தொடங்கினோம். வெப் சீரிஸ் பற்றி பேச தொடங்கிய அவர், "விகடனுக்காக இரண்டாம் ஆட்டம் என்ற எனது கதையைத்தான் வெப் சீரிஸாக எடுக்கும் பிளானில் இருந்தோம். ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களில் ஒத்துவரவில்லை.

லிங்கம் ரைட்ஸ் இருந்தது: அதேசமயம் விகனிடம் லிங்கம் தொடர்பான ரைட்ஸ் இருந்தது. அப்படியே ஆரம்பித்ததுதான் அது. அதுமட்டுமின்றி, இந்தக் கதை எல்லோருக்கும் பொருந்தி போகக்கூடிய கதை. அதில் இருந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்படியே படிப்படியாக ஒர்க் அவுட் செய்தோம். கடைசியில் லிங்கம் வெப் சீரிஸ் நடந்துவிட்டது.
முதல் சாய்ஸே கதிர்தானா?: எனக்கு இந்த வெப் சீரிஸில் முதல் சாய்ஸே கதிர்தான். இந்தக் கதையில் மொத்தம் இரண்டு இருக்கிறது. ஒன்று வெகுளியான ஆளாக இருக்க வேண்டும்; இன்னொன்று அவரது ட்ரான்ஸ்பர்மேஷன்போது கோபத்தை புரிந்துகொள்ளக்கூடிய ஆளாகவும் இருக்க வேண்டும். கதிர் நடிக்கும்போது அது ஆடியன்ஸுக்கு ஸ்ட்ராங்காக மனதில் பதிந்துவிடுகிறது. இன்னொசென்ட்டான ஆளுக்கு கதிர் ஓகே; டான் ஆன பிறகு அவர் எப்படி ஒத்துவருவார் என ஆரம்பத்தில் எல்லோரும் கேட்டார்கள். ஆனால் இயல்பாகவே அவர் அதற்குள் வந்துவிட்டார்.

ஃபீல்டு ஒர்க்கெல்லாம் எப்படி?: முதலில் நான் ஒரு கதை எழுதியிருந்தேன். அதற்கு நான், எழுத்தாளர் வாஸ்தோ (வெப் சீரிஸில் முருகனாக நடித்தவர்) உள்ளிட்டோர் எல்லாம் சேர்ந்து நிறைய க்ரவுண்ட் ஒர்க் செய்தோம். பிறகு ஷோ ரன்னராக பிரசாந்த் பாண்டியராஜன் வந்தார். அவர் நிறைய சோர்ஸ்கள் மூலம் கதைகளை கொண்டு வந்தார்.அதனையடுத்து மீண்டும் எழுதினோம். அனைவரும் சேர்ந்துதான் இந்த வெப் சீரிஸுக்காக உழைத்தோம்.
ஸ்க்ரீன் ப்ளே ஸ்லோ என சொல்கிறார்களே?: உலகம் முழுவதுமே இந்த மாதிரி எதிர்பாராமல் ரவுடி ஆனவர்களின் கதைதான் நிறைய இருக்கும். ஆனால் நாம் அதை எந்த நிலத்திலிருந்து சொல்கிறோம், எந்த கலாசாரத்தை சொல்கிறோம் என்பதில் இருக்கிறது. ஸ்க்ரீன்ப்ளே பரபரவென்று செல்ல வேண்டும் என சொல்கிறார்கள். அது சினிமாவுக்கே ஓகே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.நமது வாழ்க்கை பரபரவென போகாமல் நிதானமாகத்தானே போகிறது. அதேபோல் பூர்ணிமா ரவி கேரக்டரை நான் எழுதும்போது, இது கதைக்குள்ளேயே இல்லையே என்றுதான் பலரும் சொன்னார்கள்.

அதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் இது லிங்கம் என்ற ஒரு கேரக்டரின் கதையாக மட்டும்தான் இருந்திருக்கும். இந்த ஸ்க்ரீன்ப்ளேவே என்னை பொறுத்தவரை பரபரவென்றுதான் இருக்கிறது. 5, 6 எபிசோடுகள் வரை அந்த கேரக்டர்களை பற்றி நிதானமாக சொல்லிவிட்டு; கடைசி இரண்டு எபிசோடுகளில் அதற்கான தீர்வுகளை சொல்லியிருக்கிறேன்" என நிதானமாக விளக்கினார்.
அந்த சீன் அதன் இன்ஸ்பிரேஷன்: வெப் சீரிஸில் போஸ் வெங்கட்டுக்கு கொடுக்கப்படும் 30 நாள் அவகாசம் குறித்த சீன் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த லட்சுமி, "இஸ்மாயில் கதாரே என்ற அல்பேனிய நாவலாசிரியர் எழுதிய ப்ரோக்கன் ஏப்ரல் என்ற நாவல் இருக்கிறது. அல்பேனிய பழங்குடியின மக்களுக்குள் மாறி மாறி கொலைகள் செய்துகொள்வது சாதாரணமான விஷயம். ஆனால் அதிலும் ஒரு ஒழுக்க நெறிகள் இருக்கும். அந்த நாவலில், ஒரு கொலை நடந்த பிறகு, 30 நாட்கள் அந்த சடங்குகளை அனுஷ்டிக்க வேண்டும் என்பதால்; சட்ட திட்டங்களை வகுக்கும் சங்கத்திடம் சென்று, 30 நாட்கள் யாரும் எங்களை தாக்க கூடாது என்று அனுமதி கேட்பார்கள். அதிலிருந்து இன்ஸ்பையர் ஆகி அந்த சீனை எழுதினேன்" என்றார்.
லிங்கம் 2 எப்போது?: தொடர்ந்து பேசிய அவர், "லிங்கம் 2வுக்கான வேலைகளும் விரைவில் தொடங்கவிருக்கின்றன. லிங்கத்துக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸும் நல்லபடியாகவே இருக்கின்றன. விரைவில் கானகன், கொமோரா நாவல்களையும் திரைவடிவாக்குவேன்" என உற்சாகத்தோடு முடித்தார்.


Click it and Unblock the Notifications
