Kadhalikka Neramillai:விந்து தானம், தன்பாலின திருமணம்..காதலிக்க நேரமில்லை இன்றைய தலைமுறைக்கான படம்!
சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், வினய்,யோகிபாபு நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. திருமணம் செய்யாமல் செயற்கை கருத்தரிப்பு, விந்து தானம், தன்பாலின திருமணம் என பல விஷயத்தை கிருத்திகா இப்படத்தில் துணிச்சலாக சொல்லி இருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையை ஈர்க்கும் கதையாக இப்படம் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நித்யா மேனன் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார். அந்த காதலனுடன் விரைவில் திருமணம் நடக்க இருந்த நேரத்தில், காதலன் நித்யா மேனனை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை, நித்யா மேனன் பார்த்து விடுகிறார். இதனால் அந்த திருமணத்தை நிறுத்திவிடுகிறார். மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள ஆண் எதற்கு என்று முடிவு செய்யும் நித்யா மேனன், செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளமுடிவு செய்து, அதற்கான சிகிச்சை எடுத்து கர்ப்பமாகிறாள்.

காதலிக்க நேரமில்லை படத்தின் கதை: பெங்களூரில் இருக்கும் ஜெயம்ரவி, காதல் தோல்வியால் துவண்டு போய், பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். தனது நண்பர் வினய் வற்புறுத்தலால் மருத்துவமனை ஒன்றில் ஜெயம் ரவி, விந்தை தானம் செய்கிறார். ஜெயம் ரவி தானம் செய்த விந்தின் மூலமாகத்தான் நித்யா மேனன் கர்ப்பம் அடைகிறாள். தன் குழந்தையின் தந்தை, ஜெயம் ரவி தான் என்று தெரியாமலேயே இருவரும் பழகுகின்றனர். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மீதிக் கதை.
புதுமையான கதை: படம் பார்த்த ரசிகர் ஒருவர் காதலிக்க நேரமில்லை படத்தின் கான்செப்ட் ரொம்ப நன்றாகவே இருந்தது. திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருந்தாலும், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்பதை அழகாக படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் கதையே மிகவும் புதியதாக இருந்தது. ஆனால், படம் மிகவும் மெதுவாக செல்வதில் கொஞ்சம் போர் அடிக்கிறது. அதில் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். மற்றபடி படத்தின் இசை, ரவியின் நடிப்பு, நித்யா மேனனின் நடிப்பு என அனைவரின் நடிப்பு சூப்பராக இருக்கிறது.
அனைத்தும் சூப்பர்: படம் பார்த்த மற்றொருவர், இந்த படத்தின் கதை எதிலுமே பார்க்காத கதையாக புதிதாக இருக்கிறது. அவர்கள் கதையை எடுத்து சென்ற விதம் என அனைத்துமே ரசிக்கும்படி இருந்தது. காதலிக்க நேரமில்லை படம் இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் படமாக இருக்கும். ரொமான்டிக் ஜானரை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். முதல் பாதி மெதுவாக செல்வது போல இருந்தது. ஆனால், இரண்டாம் பாதி நன்றாக இருந்தது.
அனைவருக்கும் பிடிக்கும்: ஜெயம் ரவி,நித்யாமேனனின் காதல் ரசிக்கும்படி இருந்தது. அப்படியே ரொம்பவும் லவ் லவ் என்று சொல்லாமல், காதலை அழகாக சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமா இதுவரை பார்க்காத கதையாக இருந்தது. மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி நகர்வது போல ஒரு நல்ல கதையை கொடுத்து இருக்கிறார்கள். கிருத்திகா உதயா நிதியின் இயக்கம், ஏஆர் ரகுமானின் இசை நன்றாக இருந்தது. மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம். அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











