கீர்த்தி சுரேஷ் திருமணத்திலேயே விஜய்யிடம் சொன்னேன்.. லிங்குசாமி ஓபன் டாக்.. சொல்லி அடிச்சிருக்காங்க
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கும் விஜய்யை பார்த்து அனைவருமே ஆச்சரியம்தான் படுகிறார்கள். ஏனெனில் கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்களில் சி.எம் ஆகியிருக்கிறார். அவர் இப்படி ஒரு பிரளயத்தை நிகழ்த்துவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் ரிசல்ட் அன்று காலை எட்டு மணிக்கு என்னுடைய ஆஃபிஸில் நான், ஷங்கர், பேரரசு, சரண் உள்ளிட்டோர் எல்லாம் கூடிவிட்டோம். ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது மாதிரிதான் அன்று பார்த்தோம். ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம்தான், விஜய் கண்டிப்பாக வெல்வார். இத்தனை சீட்டு வருவார் என்று உறுதியாக சொன்னார். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. அவர் மட்டுமில்லை எனக்கும் அந்த நம்பிக்கைதான் இருந்தது.

கணக்கெல்லாம் போட்டார்கள்: ஆனால் சிலரோ அதெல்லாம் வாய்ப்பே இல்லை. கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் எப்படி வர முடியும். அவர்கள் இவ்வளவு செய்திருக்கிறார்கள். இவரால் எப்படி வர முடியும். இத்தனை வாக்குகள்தான் வரும் என்றெல்லாம் கணக்கு போட்டார்கள். ஆனால் அத்தனை கணக்கையும் பொய்யாக்கிவிட்டார் விஜய். சாதி, மதம், பணம் என அனைத்தையும் கடந்து வென்றிருக்கிறார். கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் இப்படி ஒரு மேஜிக்கா என ஆச்சரியமாக இருக்கிறது.
நம்முடனேயே ஒரு எம்ஜிஆர்: என்னிடம் பிரபுதேவா, 'சார் நம்முடனேயே ஒரு எம்ஜிஆர் இருந்திருக்கிறார். நமக்குதான் தெரியாமல் போய்விட்டது' என சொன்னார். அது நிஜம். விஜய்யின் கான்ஃபிடென்ஸ் லெவல் ஆச்சரியம்தான். சாதாரண குடும்பத்தின் பசங்க தேர்தலில் வென்று வருவது எவ்வளவு பெரிய ஆச்சரியம். ஊழல் ஒழிந்துவிட்டதாகத்தான் சொல்கிறார்கள். அவருடைய கட்சியில் சேர்வதாக இல்லை. ஆனால் அவருடன் எப்போதும் பயணிப்பேன். அவர் வென்ற பிறகு நான் வரவில்லை. தேர்தலுக்கு முன்னரே அவரிடம் நான் என்ன சொன்னேன் என அவருக்கும் எனக்கும் தெரியும்.
நல்லது நடந்திருக்கு: நல்லது நடந்திருக்கிறது. கோவாவில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்யை சந்தித்தேன். அப்போது மாலை சந்திக்கலாம் அண்ணா என சொன்னார். அந்த மீட்டிங் ஒரு மணி நேரம் போனது. முதலமைச்சரான பிறகு அவர் எப்படி இருக்க வேண்டும் என நான் சொன்னேன். எப்போதுமே எனக்கும் அவருக்கும் ஒரு கனெக்ட் இருக்கும். நானும் அவரும் படம் செய்ததில்லை. இருந்தாலும் கனெக்ட்டில் இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுவார்கள்.
என்னுடைய பாடல்கள்தான்: நான் அவர் வீட்டுக்கு செல்லும்போது என்னுடைய பட பாடல்களைத்தான் போடுவார். நான், ஷங்கர், வெற்றிமாறன், மணிரத்னம் உள்ளிட்டோர் ஒரே டீமாக இருப்பதும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவர் என்னிடம், 'நீங்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசுவீர்களாமே.. என்ன பேசுவீர்கள் என்றெல்லாம் கேட்பார். விஜய் பார்க்காத பணமா?.. 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஆள் அவர். அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறார். நாம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். அது சந்தோஷமாக இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
