இளையராஜாவிடம் போன பிறகுதான் அமைதி.. மஞ்சணத்தி கொண்டாட்டமாக இருக்கும்.. மாரி செல்வராஜ் ஓபன்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் பைசன் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட்டானது. விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு அந்தப் படம் புதிய வாழ்க்கையை திரைத்துறையில் உருவாக்கி கொடுத்தது. அடுத்ததாக மாரியின் இயக்கத்தில் மஞ்சணத்தி திரைப்படம் வரவிருக்கிறது. மேலும் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள்; ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவேகூட; படத்தையும், அதில் வைக்கப்பட்டிருந்த க்ளைமேக்ஸ் ஷாட்டையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி போனார். அதனை அவரே ஒரு மேடையில் ஓபனாக சொல்லவும் செய்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு மாரி இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன.

பைசன் - காளமாடன்: இந்தப் படங்களுக்கு பிறகு விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை இயக்கினார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இயக்கியிருந்தார் மாரி. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சக்கைப்போடு போட்டு; மொத்தம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
துருவ் விக்ரமுக்கு வாழ்க்கை: அதேபோல் துருவ் விக்ரமுக்கென தனி இடத்தையும் அந்தப் படம் உருவாக்கி கொடுத்தது. அவரும் அந்தப் படத்தில் கடுமையாக உழைத்திருந்தார். இதற்கு முன்னர் அவர் நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில்; பைசன் படத்தின் மெகா ஹிட் துருவ்வுக்கு மட்டுமின்றி அவரை பெற்ற சியான் விக்ரமுக்கும் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. மேலும் அந்தப் படத்துக்கு பிறகு திரைத்துறையில் எடுக்கும் முடிவுகள் குறித்து மாரியிடம் துருவ் தவறாமல் கலந்தாலோசிக்கிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு.
மஞ்சணத்தி மாரி செல்வராஜ்: அடுத்ததாக மாரி செல்வராஜ் மொத்தம் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். ஒன்று தனுஷை வைத்து. இன்னொன்று மஞ்சணத்தி. இவற்றில் தனுஷை வைத்து இயக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், மஞ்சணத்தி படத்துக்கு இளையராஜாவும் இசையமைக்கிறார்கள். இரண்டு பேருமே இந்தியாவின் ஐகான்கள். அதிலும் முதன்முறையாக ராஜாவுடன் மாரி செல்வராஜ் இணைந்தது பெரிய ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
மாரி செல்வராஜ் பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நான் இப்போது இரண்டு படங்கள் செய்துகொண்டிருக்கிறேன். ஒன்று தனுஷை வைத்து. இன்னொன்று மஞ்சணத்தி. தனுஷ் படத்துக்கு ரஹ்மானும், மஞ்சணத்தி படத்துக்கு இளையராஜாவும் இசையமைக்கிறார்கள். இளையராஜாவோடு வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது.
ராஜாவிடம் போனால்தான் அமைதி: ஆசை என்பதைவிட கனவு என்றே சொல்ல வேண்டும். அவருடன் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே மஞ்சணத்தி படத்தை உருவாக்குகிறேன். மனிதர்கள் மீது கோபம், அபத்தம் என எது இருந்தாலும் இளையராஜாவிடம் சென்ற பிறகுதான் அமைதி கிடைக்கிறது. என்னுடைய எல்லா படங்களிலும் அப்பா கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். மஞ்சணத்தி படத்தில் என்னுடைய அப்பா இருக்கமாட்டார். என்னுடைய அம்மா இருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications
