யார் ”தலித்” எனத் தெரிந்துகொள்ள பார்க்க வேண்டிய படம் பரியேறும் பெருமாள்!
சென்னை: யார் தலித் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது பரியேறும் பெருமாள் திரைப்படம்.
பாலுங்குறது உங்க பேரு... என ஆரம்பிக்கும் வேதம் புதிது படத்தின் வசனம்தான் தமிழ்சினிமாவில் சுயசாதி பெருமைக்கு எதிராக துணிச்சலாக எழுப்பப்பட்ட முதல் குரலாயுதம். அதற்கு முன்பு வந்த பல படங்களில் ஒடுக்கப்பட மக்களுக்காக போராடும் கதாநாயகனைச் சுற்றி கதையமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் அவர் ஒரு மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர், ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் நல்லவர் என்ற கூற்றை கூடவே தூக்கித் திரிந்தன.
இந்தப் படத்திற்குப் பிறகு வந்த பல திரைப்படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசுகிறோம் என்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடும் நாயகர்களையும் உருவாக்கின.
[பரியேறும் பெருமாளுக்காக தீயாக வேலை பார்க்கும் விக்னேஷ் சிவன்]

அரசியல்
இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலேபோய், எங்களுடைய அரசியலை நீ ஏன் பேசுகிறாய்..? எனக்கான அரசியலை நானே பேசிக்கொள்கிறேன் என்ற ஒற்றை வாக்கியத்தோடு களத்தில் குத்தித்தார் இயக்குனர் பா.ரஞ்சித். இவற்றையெல்லாம் தாண்டி உண்மையில் தலித் என்றால் என்ன? ஒடுக்கப்பட்டவர்கள் யார் என்ற மறைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்ற, அல்லது சாமான்ய மக்களால் புரிந்துகொள்ளப்படாத கருத்தியலை மிக ஆழமாகவும், நேர்த்த்தியாகவும் சொல்லியிருக்கும் படமே பரியேறும் பெருமாள்.

அம்பேத்கர்
"கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்" என்ற அம்பேத்கரின் முழக்கத்தை தோளில் தூக்கிக்கொண்டு திரிபவர்களுக்கும், அதை பின்பற்றுபவர்களுக்கும், அந்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக இருக்கின்ற "கற்பி" என்ற வார்த்தை கைகூடவே இல்லை என்ற உண்மையை பரியேறும் பெருமாள் சொல்கிறது. அந்த பெயரை உச்சரிக்க முடியாமல் கூனி குறுகி நிற்பவனின் உளவியலை இப்படம் பேசுகிறது.

நீதி
பாப்பாள் என்ற சத்துணவு பணியாளர் சமைக்கக் கூடாது என பள்ளி மாணவர்களின் பெற்றோர் தடுத்தபோதும், அதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து மீண்டும் அவருக்கு பணி வழங்கிட்டபோதும், தீண்டாமைக்கொடுமையால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் பாதிக்கபப்ட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டுமென நாமெல்லாம் முகநூலில் முழக்கமிட்டோம். ஆனால் அன்று இரவு அந்த பாப்பாளின் மனம் என்ன நினைத்திருக்கும்? அவருடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இவைதான் பரியேறும் பெருமாள் பேசும் விஷயங்கள்.

மாசி செல்வராஜ்
ஒடுக்கப்பட்ட மக்கள் எனச் சொல்பவர்களை எத்தனையோ சினிமாவில் காட்டியிருக்கின்றனர். அவர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதையும் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால், நீண்ட நெடிய இந்திய சமுகத்தில் ஒடுக்கப்பட்டவனாக உணரும் ஒருவனின் மனநிலையை, உளவியல் போராட்டத்தை அப்படியே ஸ்கேன் செய்து திரையில் காண்பித்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஜோவின் அப்பா
தங்கள் சாதிப் பெண்ணை பரியன் காதலிக்கக் கூடாதென்று ஒரு அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள். பின்னர் பரியன் காதிலியான ஜோவின் அப்பா வந்து பரியனை மிரட்டுகிறார். அதே நேரத்தில், "உன்னக் கொல்றதோட நிக்காம எம் பொண்ணையும் கொன்னுடுவானுங்கடா.. விட்டுடா" என்கிறார். இது மிக முக்கியமான காட்சி. சாதி எனும் கூரிய ஆயுதம் இருபக்கமும் பழிவாங்கும் என்பதற்கான வசனம் அது. அதேபோல், பரியனின் அப்பா அரை நிர்வாண நிலையில் துரத்தப்படும்போது மேலே பறக்கும் கட்சிக்கொடிகள் கவனிக்கப்படவேண்டியவை. தலித் என்ற வார்த்தையை பேசுபொருளாக்கி அரசியல்வாதிகள் குளிர்காய்வதை நினைவூட்டுகிறது. சாதிய பிரச்சனைகளில் கட்சிகளின் அணுகுமுறைதான் கொடிகளாய் காற்றில் பறப்பதுபோல் தோன்றுகிறது.

யார் தலித்
ஓரு தெருவில், வீதியில் உயர்ந்த ஜாதியென கர்வத்துடன் மற்றவர்கள தாழ்ந்தவர்களாக நினைக்கும் ஒருவனும், பொதுச்சமூகத்திற்கு வரும்போது கல்வி, அறியாமை போன்ற படிநிலைகளில் ஒடுக்கப்பட்டவனாய் தலித்தாய் அறியப்படுகிறான். அதனால், "தலித்" சொல்லாடல் பிறப்பால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் உரித்தான சொல் அல்ல. இந்த சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டு, சுய அடையாளத்தை இழந்து சிவப்பு நிற குருதியோடும் பிணமாய் வாழும் எல்லோருக்கும் பொருந்தும் என்பதை உரக்கச் சொல்கிறது இப்படம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனச் சொல்லி மனித இனம் கருப்பி என்ற நாயைவிட கீழானவர்களாக மாறிப்போனதை தோலுரிக்கிறது.

முடிவு
சாதியையும் காதலையும் கொண்டு கதையமைக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் கோரமான முடிவுகளையே தந்திருக்கின்றன. அது இனி தேவையில்லை என பரியனும் எதிர்த் தரப்பு பேசிக்கொள்வதுபோல் சுமூகமாக இப்படம் முடிகிறது. சாதியின் பெயரால் இனி எந்த உயிரும் போகக்கூடாது என்பதை மையமாக வைத்தே முடிவை தீர்மானித்திருக்கிறார் மாரி. மேலும் அந்த சுமூக பேச்சுவாரத்தைக்கு பரியன் கடந்துவந்த பாதைதான் இங்கு நாம் பின்பற்றி கொண்டாடப்படவேண்டிய ஒன்று.
பரியேறும் பெருமாள் நிச்சயம் ஒரு தலித் படம்தான். ஆனால் தலித் அல்லாதோர் என நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.


Click it and Unblock the Notifications











