பார்த்திபனை திட்டிய பாக்யராஜ் அசிஸ்டெண்ட் யார்?.. அவரே சொன்ன விளக்கம்
சென்னை: இயக்குநர் பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிலும் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பார்த்திபனை ரொம்பவே பாதித்திருக்கிறது. தனது குருநாதரை தகனம் செய்யும் வரை அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார். ஆனால் பாக்யராஜின் உதவியாளர் ஒருவர் தன்னை திட்டியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அளவில் புகழடைந்த இயக்குநர்களில் ஒருவரான பாக்யராஜ்; சில நாட்களுக்கு முன்பு காலை நடைபயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்படி வந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உயிர் பிரிந்தது. பாக்யராஜின் உடல் முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

திட்டு வாங்கிய பார்த்திபன்: அவரிடம்தான் பார்த்திபன் உதவி இயக்குநராக இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். எனவே தன் குருநாதர் உயிரிழந்ததிலிருந்து அவரால் மீண்டு வர இயலவில்லை. இறுதி சடங்குகளின்போது அத்தனை வேலைகளையும் அவர் பார்த்து பார்த்து செய்தார். ஆனால், அதெல்லாம் முடிந்த பிறகு, பாக்யராஜின் உதவியாளர் ஒருவர் தன்னை மோசமாக திட்டியதாகவும் பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
பார்த்திபன் பதிவு: அதாவது, நீதான் பாக்யராஜுக்கு எல்லாமா?.. நீயும் இறப்பாய் உனக்கு கூட்டம் வராது என்று கூறியதாக தெரிவித்தார். அதனையடுத்து அவரை யார் அப்படி பேசியது என பலரையும் சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இதுகுறித்து பார்த்திபன் வெளியிட்டிருக்கும் பதிவில், "பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசியிருந்தேன்.
மிகவும் வருந்துகிறேன்: அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக என் மரியாதைக்குரிய இயக்குநர்கள் திரு. பாண்டியராஜன் மற்றும் திரு. ஆர். சுந்தரராஜன் ஆகியோர் மீது கோபமான கருத்துகளைப் பதிவிட்டிருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். அந்த நாகரீகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலே போகட்டும்,கூடவே என் நினைவு பெட்டகத்திலிருந்தும் அவர் கக்கிய விஷமும் கரைந்துப் போகட்டும்.
நல்லதை மட்டும் நினைவில் கொள்ளும் வகையில் இன்று ஒரு நற்செய்தி. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையில் இடம் பெற செய்து எடுத்துச் சென்றேன். ஏகமனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் "நிரந்தர கௌரவத் தலைவர்" திரு. கே. பாக்யராஜ் என்பதே.
இனி ஆண்டாண்டு காலமானாலும், அது அப்படியே நிலைத்திருக்கும். கூடவே, அந்தச் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டிடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி. அதற்காக 247 எழுத்துக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்கி, சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு சூட்டி என் மகிழ்ச்சியை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
