ஜனநாயகன் மாதிரியே ஜெயிலர் 2?.. ரஜினி எடுத்த அதிரடி முடிவு?.. என்ன விவரம் தெரியுமா?
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கும் இப்படம்; மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையையும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் விதைத்திருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகி விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் முதன்முறையாக ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்தார்கள். அந்த அறிவிப்பு வந்தபோது பெரும்பாலானோருக்கு நெல்சன் மீது நம்பிக்கையில்லை. ரஜினியை தவிர. அவர்தான் முழு நம்பிக்கையையும் இயக்குநர் மீது வைத்து கால்ஷீட் கொடுத்தார். தன் மீது இந்தியாவின் உச்சபட்ச நட்சத்திரம் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்போடு படத்தை இயக்கி மெகா ஹிட்டாக்கினார். மொத்தம் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

ஜெயிலர் 2: ஜெயிலர் படத்தின் மெகா வெற்றி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை உற்சாகப்படுத்த; உடனடியாக ரஜினி, நெல்சன், அனிருத்துக்கு சொகுசு காரை பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன். மேலும், அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையுடைய செக்கையும் கொடுத்திருந்தார். அந்தப் படம் ஜெயிலர் 2வாக உருவானது. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, வித்யா பாலன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டானார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தது.
பாலிவுட் நட்சத்திரம்: கூலி படத்தில் அமீர் கான் நடித்தது போல் இதில் ஷாருக்கானை நடிக்க வைக்க பிளான் செய்தது படக்குழு. ஆனால் அமீருக்கு நிகழ்ந்த கதி என்னவென்பதை பார்த்த ஷாருக்; இதிலிருந்து நழுவிவிட்டார். அதனையடுத்து ஹிருத்திக் ரோஷனை கமிட் செய்தார்கள். அவரும், ரஜினியுடன் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்து; உடனே ஓகே சொல்லி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். கூலி படத்தில் அமீருக்கு ஏற்பட்ட நிலைமை மாதிரி இதில் நடந்துவிடாது என்று நம்பலாம்.
படத்தின் ரிலீஸ் தேதி: படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்க்கிவிட்டதாக தெரிகிறது. முதல் பாகத்தை விடவும் இந்தப் பாகத்தை பெரிய வெற்றியாக்கிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து கவனம் செலுத்திவருகிறார். படமானது அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாகும் என சமீபத்தில்தான் அறிவிப்பு வந்தது. எனவே அடுத்தக்கட்ட வேலைகள் பரபரத்திருக்கின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ப்ரோமோஷன் பணிகளை செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாராக இருக்கிறதாம்.
படத்தின் இசை வெளியீட்டு விழா: இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, மலேசியாவில் இருக்கும் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில்தான் ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்கு ரஜினி டபுள் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தெரிகிறது. வெகு விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கு முன்னர் ரஜினியின் எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மலேசியாவில்தான் நடைபெற்றது.
ரஜினியை சந்தித்த மாலிக்: இதற்கிடையே ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ விழாவும் அதே ஸ்டேடியத்தில்தான் நடந்தது. அதனை மாலிக் என்பவர் முன்நின்று ஒருங்கிணைத்தார். இப்போது ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா பொறுப்பையும் அவரிடமே கொடுத்திருக்கிறார்களாம். சமீபத்தில்கூட அவர் ரஜினியுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இதையெல்லாம் கவனித்த ரசிகர்களோ, விஜய் ரூட்டிலேயே ரஜினியும் போகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
