தாய் கிழவி மெகா ஹிட்.. இயக்குநருக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்.. எவ்வளவு விலை தெரியுமா?
சென்னை: சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா லீடு ரோலில் நடித்த திரைப்படம் தாய் கிழவி. படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலிலும் சக்கைப்போடு போட்டு; மொத்தம் நூறு நாட்களுக்கும் மேலாக தியேட்டர்களிலும் ஓடியிருக்கிறது. படம் பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்கு கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான திரைப்படம் தாய் கிழவி. இதில் நடிகை ராதிகா லீடு ரோலில் நடித்திருந்தார். அவர் தவிர்த்து அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன், ரேச்சல் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் படமானது ரிலீஸானது. வெளியீட்டுக்கு முன்பே இந்தப் படத்தை பற்றிய ஆஹோ ஓஹோ பேச்சுதான் திரைத்துறை எங்கும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் படம்: சிவக்குமாரை பொறுத்தவரை ஏற்கனவே ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் கவனத்தை ஈர்த்தவர். தாய் கிழவி மூலம் இயக்கத்திலும் தன்னுடைய அழுத்தமான முத்திரையை பதித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களுக்கு ஆதரவான படத்தை கமர்ஷியலாகவும், அதேசமயம் எதார்த்தம் மீறாமலும் கொடுத்திருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது. திரையுலகத்தின் ஜாம்பவனான கமல்ஹாசனும் படத்தை பார்த்துவிட்டு ஏகபோகமாக பாராட்டியிருந்தார்.
வசூலிலும் கெத்து: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. மொத்தம் நூறு கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இளம் இயக்குநரின் முதல் படமே; அதுவும் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் ஒன்று இவ்வளவு வசூலித்திருப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்படி வணிக ரீதியான வெற்றியை பெற்றால்தான்; இதுபோன்ற படங்கள் கோலிவுட்டில் அதிகம் வரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகமொத்தம் இந்தப் படத்தின் மூலம் சிவக்குமார் முருகேசன் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
கார் பரிசு: படமானது தியேட்டர்களில் வெற்றிகரமாக நூறு நாட்கள் ஓடியிருக்கிறது. அதனை கொண்டாடும் விதமாக படக்குழு தரப்பில் விழா எடுக்கப்பட்டது. அதில் படக்குழுவினரும், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார்கள். அப்போது படம் வெற்றி பெற்றதன் காரணமாக இயக்குநர் சிவக்குமாருக்கு, Mahindra BE 6E, electric SUV சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் கார் 18 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாய்வரை இருக்கும் என கருதப்படுகிறது. அந்த காரை சிவக்குமார் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.
சிவக்குமாரின் அடுத்த படம்: சிவக்குமார் முருகேசனின் அடுத்த படமாக சேயோன் வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்; சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தையும் முடித்துவிட்டு மீண்டும் சிவக்குமார் இயக்கத்திலேயே எஸ்கே நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்றும் தகவல் ஓடுகிறது. தாய் கிழவி மாதிரியே சேயோனும் மெகா ஹிட்டாகும் என்ற பேச்சு இப்போதே கோடம்பாக்கத்தில் எழ தொடங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
