Soori: ரசிகர்கள் மண் சோறு தின்றது எல்லாம் முட்டாள்தனம்.. கறாரா சொன்னாலும் பளிச்சுனு சொன்ன சூரி
சென்னை: "படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மண்சோறு தின்றது எல்லாம் முட்டாள்தனம். சாப்பாட்டை வீணாக்காதீங்க தம்பி" என்று ரசிகர்களை நடிகர் சூரி வெளிப்படையாக கண்டித்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர்களுக்காக ரசிகர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களை பலரும் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லும் நிலையில், சூரி நேரடியாக கண்டித்திருப்பது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றிகரமாக வலம் வரும் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். கடலோர மக்களின் வாழ்க்கையையும், படகு பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சாப்பாட்டோட அருமை எனக்கு தெரியும்: இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சூரி பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தனது முந்தைய படமான மாமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவத்தை குறிப்பிட்ட சூரி, "அது எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை. உண்மையை சொல்லணும்னா, வெட்கமாகத்தான் இருந்தது" என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும், "சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நான். அந்த பசியோட வலி என்னன்னு எனக்கு தெரியும். நீங்க சாப்பாட்டை மதிக்காமல், வீணாக்கி இப்படிச் செய்வது சரியில்லை. ஒரு படம் நல்லா இருந்தா மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பாங்க. மண்சோறு தின்றா படம் ஓடாது. இது முழுக்க முழுக்க முட்டாள்தனம் தம்பி" என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது ரசிகர்களுக்கே அறிவுரை கூறியுள்ளார்.
எல்லா ஹீரோக்களும் இப்படிச் சொல்வதில்லை: பொதுவாக ரசிகர்கள் தங்களுக்காக செய்யும் செயல்களை நடிகர்கள் விமர்சிப்பது அரிது. ஆனால், சூரி தனது ஹீரோ பயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களை சரியான பாதையில் வழிநடத்தும் வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. "ரசிகர்கள் மீது அன்பு இருந்தால் இப்படித்தான் பேச வேண்டும்", "சாப்பாட்டின் மதிப்பை நினைவூட்டியிருக்கிறார்" என்று பலரும் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகன் ரிலீஸிலும் சர்ச்சை: இதற்கிடையில், ஜனநாயகன் படம் வெளியாகியுள்ள சூழலிலும் சில ரசிகர்கள் படத்தின் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்டதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தன.
குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்காக இளைஞர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
வைரலாகும் சூரியின் பேச்சு: இந்த சூழலில்தான் சூரி பேசிய பழைய பேட்டி மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டாலும், தவறான செயல்களை ஆதரிக்காமல், நேரடியாக கண்டித்து பேசியிருப்பது அவருக்கு கூடுதல் மரியாதையை பெற்றுத் தந்துள்ளது. "ரசிகர்கள் என்ற பெயரில் உணவை வீணாக்க வேண்டாம். நல்ல படத்தை மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பார்கள்" என்ற சூரியின் வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications

