சூர்யா 47 - எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.. விளக்கமாக சொன்ன இயக்குநர்
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் அந்தப் படம் மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ், ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் எதிர்பார்க்காத அடியை வாங்கிய சூர்யா அதிலிருந்து மெல்ல மீண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். அந்தப் படத்தால் ஏற்பட்ட மோசமான விஷயங்களை ரெட்ரோ சரிக்கட்டும் என்று நம்பியிருந்தார். ரசிகர்களும் அதீத ஆர்வத்தை வைத்திருந்தார்கள். ஆனால், எப்போதும் க்ளாஸிக்காகவும், கமர்ஷியல் டச்சோடும் படம் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறை ஏனோ தெரியவில்லை பயங்கரமாகவே சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் பலர் கூறினார்கள்.

கருப்பு மெகா ஹிட்: கங்குவா, ரெட்ரோ படங்களின் தோல்விக்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க; இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். நீண்ட நாட்களாக ஏங்கியிருந்த தியேட்டரிக்கல் ஹிட் இதில் கிடைக்குமா என்ற ஆவலில் இருந்தார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
படம் மெகா ஹிட்: அந்த ஏக்கத்தை கருப்பு திரைப்படம் தீர்த்து வைத்தது. தியேட்டரில் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கெத்து காண்பித்தது. ஆனால் ஓடிடிக்கு வந்த பிறகு படம் விமர்சன ரீதியாக செமத்தியான அடி வாங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை கண்டுபிடித்த ரசிகர்கள்; க்ளைமேக்ஸில் சிங்கம் சூர்யா வந்த சீனில் சொதப்பியிருந்த கிராஃபிக்ஸையும் எடுத்து போட்டு அடித்துவிட்டார்கள்.
அடுத்த படங்கள்: அந்த சீன் ஓடிடிக்கு வந்த பிறகு விமர்சனத்தை சந்திக்கும் என தான் முன்னதாகவே உணர்ந்திருந்ததாக பாலாஜியும் தெரிவித்திருந்தார். எது எப்படியோ படம் ஹிட்டாகிவிட்டது. அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும், ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா 47 திரைப்படமும் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் சூர்யா 47 பற்றி இயக்குநர் ஜித்து மாதவன் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜித்து மாதவன் சொன்னது: அப்படத்தில் சூர்யா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். சிங்கம் படத்துக்கு பிறகு காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அதுகுறித்து ஜித்து பேசுகையில், "இந்தப் படத்தை ரசிகர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது குறித்து இன்னும் நாங்கள் இறுதி முடிவை எடுக்கவில்லை. அதனால்தான் படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இதுவரை வெளியிடவில்லை. இந்தப் படத்தை பற்றி எனக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. கதையின் மீது முழு நம்பிக்கையுடன் பணியாற்றுகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
