சிவகார்த்திகேயனோடு எப்போதும் மோதமாட்டேன்.. தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்த படம் தாய் கிழவி. இந்த வருடத்தின் முதல் பாதியில் ரிலீஸான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வெற்றிகரமாக நூறு நாட்களும் தியேட்டரில் ஓடி கெத்து காண்பித்தது. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் நூறாவது வெற்றி விழா கொண்டாட்டத்தில் இயக்குநர் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சிவக்குமார் முருகேசன் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தில் அடையாளம் பெற்றார். ஆனால் அதைவிட பெரிய அடையாளம் அவருக்கு பெற்றுக்கொடுத்தது என்றால் அது தாய் கிழவி திரைப்படம்தான். ராதிகா லீடு ரோலில் நடித்திருந்த அந்தப் படத்தை பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு முற்போக்கான விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உருவாக்கியிருந்தார் சிவக்குமார். அவர் மீது அபார நம்பிக்கை வைத்து தயாரிக்கவும் செய்தார் சிவகார்த்திகேயன்.

தெளிவான இயக்குநர்: பொதுவாக முற்போக்கு கருத்துக்களையோ, பெண்களுக்கு தேவையான கருத்துக்களையோ சொல்லும் படங்கள் ஒன்று ஆவணப் பட ஸ்டைலில் இருக்கும் இல்லையென்றால் கே. பாலசந்தர், பாரதிராஜா ஸ்டைலில் இருக்கும். சிவக்குமார் மேற்கூறிய விஷயங்களை கமர்ஷியல் ரீதியாகவும், அனைவருக்கும் கனெக்ட் செய்யும் விதமாகவும் எடுத்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
முக்கியமாக, நமது வீட்டில் இருந்த பாட்டிகளை இந்தப் படம் மீண்டும் நம் நினைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தியதுதான் இந்தப் படத்தின் உச்சபட்ச ஸ்பெஷல் என்பது பலரது கருத்து. கமல்ஹாசனே வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்திய ராதிகா: படத்தின் கதையும், இயக்குநரும் பெரிய ப்ளஸ் மாதிரியே ராதிகாவும். அவர் இத்தனை வருட கரியரில் அசாத்தியமான நடிப்பை பல முறை வெளிப்படுத்தியிருந்தாலும்; அவருக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அந்த ஆதங்கத்தை கண்டிப்பாக தாய் கிழவி தீர்த்து வைக்கும் என்று நம்பலாம். நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என பலர் சொன்னார்கள். இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், ராதிகாவிடம், உனக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறியிருந்தார்.
தாய் கிழவி கொண்டாட்டம்: அதேபோல் இந்த வருடத்தின் முதல் பாதியில் எக்கச்சக்கமான தமிழ் படங்கள் ரிலீஸானாலும்; சூப்பர் ஹிட்டான படங்களில் தாய் கிழவி திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர்களில் வெற்றிகரமாக நூறு நாட்களை நிறைவு செய்ததை படக்குழு கொண்டாடியது. அதில் படக்குழுவினர், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கொண்டாடினார்கள். அதில் சிவக்குமாரின் பேச்சும் கவனத்தை ஈர்த்தது.
சிவக்குமார் முருகேசன் பேச்சு: அவர் பேசுகையில், "நான் இலக்கியம் அல்லது உலக சினிமாவை விரும்பும் ஆள் இல்லை. எனது வாழ்க்கையில் நான் இரண்டு விதிகளை மட்டும்தான் பின்பற்றுகிறேன். ஒன்று நான் சாப்பிடும் உணவுக்கும், பார்க்கும் வேலைக்கும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். இரண்டு, அவற்றை எனக்கு கொடுத்தவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும்.இ ந்த இரண்டு விஷயங்களையும் கற்றுக்கொடுத்தவர் சிவகார்த்திகேயன். எந்தச் சூழ்நிலையிலும் நான் ஒருபோதும் கருத்து மோதலில் ஈடுபட விரும்பாத ஒரே நபர் அவர்தான்" என்றார். இப்போது எஸ்கேவை வைத்து சேயோன் படத்தை சிவக்குமார் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
