நூறு சாமி பாக்ஸ் ஆஃபிஸிலும் வெற்றி.. மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி.. எல்லோருக்கும் நன்றி
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. சமீபத்தில் வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் பாக்ஸ் ஆஃபிஸில் டீசன்ட்டான இடத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
சசியும், விஜய் ஆண்டனியும் முதன்முறையாக இணைந்த திரைப்படம் பிச்சைக்காரன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தாய் சென்ட்டிமென்ட்டை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் அதே கூட்டணி; அதே ஃபார்முலாவில் வேறு ஸ்டைலில் நூறு சாமி திரைப்படத்தை கொடுத்திருக்கிறது. ரிலீஸுக்கு முன்னதாக செலிபிரிட்டிகளிடம் பெரிய வரவேற்பை பெற்றது போலவே; ரிலீஸுக்கு பிறகு மக்களிடமும் அமோக ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.

வசூலிலும் சூப்பர்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்சஸ்தான். இதுவரை பத்து கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் ஆண்டனி, சசி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, "ப்ளூ சட்டை மாறன் மாதிரியே ரோஸ் சட்டை ராஜன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார். ஐந்தாவது நாளிலிருந்து பாருங்கள் அன்னக்கிளி திரைப்படம் போல் நூறு சாமி ஓடப்போகிறது என இவர் கூறினார். இவர் படத்தை பார்த்துவிட்டு அப்படியே போயிருந்திருக்கலாம். ஆனால் சூப்பராக விமர்சனம் கொடுத்தார். அவர் கொடுத்த விமர்சனமும் இந்தப் படம் ஹிட்டாக காரணம். அவர் மட்டுமின்றி இன்னும் பலர் அப்படி விமர்சனம் கொடுத்தார்கள்.
அனைவருக்கும் நன்றி: எந்த பலனும் எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி பேசினார்கள். பத்திரிகையாளர்களும் மக்களிடம் இந்தப் படத்தை கொண்டு போய் சேர்த்தீர்கள். உங்கள் எல்லோருக்கும் நன்றி. சொல்லாமலே படத்திலிருந்து இப்போதுவரை ஏதோ ஒரு தனித்துவத்தை சசி செய்திருக்கிறார். ரோஸ் சட்டை ராஜனும் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி விமர்சன வீடியோக்களை தொடர்ந்து வெளியிட வேண்டும். மனதில் தோன்றுவதை பேச வேண்டும்.
பயன்படும் என நம்புகிறேன்: காலங்காலமாக இந்த சமூகம் பிற்போக்குத்தனத்தை கொண்டிருக்கிறது. கணவர் இறந்தால் தீ குளிக்க வேண்டும் என்ற நடைமுறையை நினைத்தாலே கேவலமாக இருக்கிறது. பல பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்களை இன்னும் கொண்டு போகிறார்கள். கணவரை இழந்த ஒரு பெண் இன்னொரு துணையை தேடுவது தவறு என இந்த சமூகம் ஆணித்தரமாக சொல்கிறது. அது இருக்கக்கூடாது. நிறைய பேர் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கருத்தை உடைக்க இந்தப் படம் ஒரு விழுக்காடாவது பயன்படும் என நம்புகிறேன்.
அழுதுவிட்டேன் நான்: சசி இந்தக் கதையை சொல்லும்போது அழுதுவிட்டேன். பிச்சைக்காரன் கதை கேட்கும்போதும் அழுதுவிட்டேன். இந்தக் கதையை கேட்கும்போதே இப்படி இருக்கிறதே திரைப்படமாக வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை நானே தயாரித்துவிட்டேன். எதிர்பார்த்தபடியே மக்களிடம் ஆதரவு கிடைத்திருக்கிறது. பெண்கள் நிறைய பேர் வந்து இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இன்னும் ஒரு மாதம் படத்தை ஓட வைக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
