Engal Thangam Public Review - எங்கள் தங்கம் பப்ளிக் விமர்சனம்.. கம்பேக் கொடுத்தாரா சமந்தா?
சென்னை: நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, கௌதமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் எங்கள் தங்கம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நோயிலிருந்து குணமாகி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவல் படத்தின் மீது இருந்தது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கிவருபவர் சமந்தா. முதல் திருமணம் தோல்வி, மையோசிடிஸ் நோய் ஆகியவற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட சாம்; இயக்குநர் ராஜ் நெடிமோருவை கடந்த வருடத்தில் திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க அந்தத் திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் எங்கள் தங்கம் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இது சமந்தாவுக்கு கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்களின் விமர்சனம்: அந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர், "சமந்தா இதுவரை ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக நடித்ததில்லை. கொஞ்சம் கொஞ்சம்தானே செய்வார். இதில் அவருக்கு ஃபுல்லாகவே ஆக்ஷன் இருக்கிறது. அவர் நன்றாகவே சண்டை செய்கிறார். ஒவ்வொரு சண்டைக்கும் பிஜிஎம்மும் சூப்பராக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் கலக்கிவிட்டார். சமந்தா சண்டை போடுவதெல்லாம் நடிப்பது மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு இயற்கையாக இருக்கிறது" என்றார்.
லேடி ஹீரோயிசம்: இன்னொரு ரசிகர் பேசுகையில், "முழுக்க முழுக்க லேடி ஹீரோயிசம்தான் படமே. நார்மலாக ஒரு ஹீரோ செய்வதை இங்கே ஹிரோயின் செய்கிறார். புதிதாக ட்ரை செய்திருக்கிறார்கள். கதை, ஸ்டண்ட் எல்லாம் பழைய தெலுங்கு சினிமாதான். எதுவும் மாறவில்லை. சமந்தா அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். தமிழ் வசனங்கள் எல்லாம் உண்மையில் நன்றாக இருந்தன. சமந்தா மட்டும்தான் படத்தில் பெரிய பலமாக திகழ்கிறார்" என்றார்.
ரசிகையின் கருத்து: படம் பார்த்த ரசிகை கூறுகையில், 'படம் நன்றாக இருக்கிறது. படம் முழுவதுமே சமந்தா சூப்பராக நடித்திருக்கிறார். கதைக்கு தொடர்பிருப்பதால்தான் எங்கள் தங்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் எல்லோரையும் அடிப்பது நம்பும்படியாக இல்லை. ஆனாலும் அடிக்கலாம். சமந்தா இஸ் பேக். நெருப்பு மாதிரி இருக்கிறார். சண்டை காட்சிகள் எல்லாம் செம வைபாக இருந்தன. குடும்ப கதைதான்" என்று புகழ்ந்து தள்ளினார்.
இன்னொரு ரசிகையின் கருத்து: அதேபோல் இன்னொரு ரசிகை கூறுகையில், "சமந்தாவின் நடிப்பு சூப்பராக இருக்கிறது. முதல் பாதி ஃபேமிலி ட்ராமாவாக இருக்கிறது. இரண்டாவது பாதி ஆக்ஷன் மோடில் செல்கிறது. வீட்டுக்கு மகாலட்சுமியாகத்தான் இல்லை; காளியாக இருக்கலாம் என சொல்லியிருக்கிறார்கள். தெலுங்கு வாடை கொஞ்சம் அடிக்கிறது. இருந்தாலும் தமிழ் டப்பிங் நன்றாகவே இருக்கிறது. கௌதமியின் கேரக்டரும் நன்றாகவே டிசைன் செய்திருக்கிறார்கள்" என்றார். படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சமந்தா இதில் கம்பேக் கொடுத்துவிட்டார் என அனைவருமே சொல்வதால்; சாம் ரசிகர்கள் காட்டில் மழைதான்.


Click it and Unblock the Notifications
