Gatta Kusthi 2 Blue Sattai Maran Review - கட்டா குஸ்தி 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. செம போங்க
சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. பலரும் குடும்பத்துடன் சென்று பார்க்க தகுந்த படம் என்றே சொல்கிறார்கள். இதனால் படக்குழு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வீடியோ மூலம் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு இரண்டாவது பாகத்தை உருவாக்கினார்கள். செல்லா அய்யாவுவே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ப்ரிவ்யூ ஷோவில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற படம்; நேற்று திரையரங்குகளில் வெளியாகியும் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: முதல் நாளான நேற்று அந்தப் படம் இரண்டரை கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே படமும் இதுவும் ஒரே மாதிரியான கதைதான். அந்தப் படம் செம ஹிட். அதேபோல் கட்டா குஸ்தி முதல் பாகம் வெற்றியடைந்துவிட்டது.
ஆனால் மலையாளத்தில் இரண்டாவது பாகம் எடுக்கமாட்டார்கள். ஏனெனில் இதைவிடவும் நல்ல படம் எடுக்க எங்களால் முடியும் என்ற தைரியத்தில் அவர்கள் இருக்கிறார்கள். நம் கதி அப்படி இல்லையே. எப்போவாச்சும் ஒரு ஹிட் கிடைக்கிறது. அதை வைத்தே பிழைக்க வேண்டியதுதானே புத்திசாலித்தனமான வேலை என்பது அங்கிருக்கும் கணக்கு.
முறையாகத்தான் எழுதியிருக்கிறார்கள்: கண்டிப்பாக கட்டா குஸ்தி 2வை வைத்து நம்மை சாகடிக்கப்போகிறார்கள் என்றுதான் சென்று பார்த்தோம். ஆனால் அவர்கள் முதல் பாகத்துக்கும் இரண்டாவது பாகத்துக்குமான கதையை ஓரளவு முறையாகவே எழுதியிருக்கிறார்கள். இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவில் கொஞ்சம் ஃபேமிலி, கொஞ்சம் காமெடியை கலந்து செய்யப்பட்டிருக்கிறது. காமெடி படம் என்றாலே லாஜிக் எதிர்பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். எனவே அதற்கு தயாராக போனோம்.
யோகிபாபு என்ட்ரி: இந்தப் படத்தில் ஓரளவுக்கு கதை இருந்தது. அதற்கான திரைக்கதையும் செய்திருந்தார்கள். படத்தில் நிறைய நல்ல சீன்கள் இருந்தன. ஆனால் அந்த நல்ல சீன்களை எல்லாம் ரொம்ப நல்ல சீன்களாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள். ஹீரோ ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்தை மேம்போக்காகவும், அவசர அவசரமாகவும் எடுத்து வைத்திருக்கிறார்கள். நிறைய நல்ல சீன்கள் படத்தில் இருக்கின்றன. படம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென யோகிபாபு உள்ளே வந்துவிட்டதால்; இனிமேல் படம் அவ்வளவுதான் என்று நினைத்தோம். ஆனால் அவரிடமிருந்து எப்படியோ படம் தப்பித்துவிட்டது.
மோசம் எல்லாம் இல்லை: இந்தப் படத்துக்கு சரியான ஃபினிஷிங்கையும் வைத்திருந்தார்கள். கட்டா குஸ்தி 1ல் கதையை அடுத்தடுத்து கணிக்க முடியாது. இரண்டாவது பாகத்தில் அப்படி இல்லை. இருப்பினும் முதல் பாகத்தைவிடவும் இதில் கொஞ்சம் கூடுதலாக எமோஷனல் சீன்கள் வைத்திருக்கிறார்கள். அது ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது. பெரிதாக லாஜிக் எதிர்பார்க்காமல்; மூளையை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு குடும்பத்தோடு ஒரு வார இறுதியில் படத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்துக்கு தாராளமாக போகலாம். பெண்கள், குழந்தைகள் படத்தை ரசிப்பார்கள். ஆண்களுக்கு பெரிதாக போர் அடிக்காது. கண்டிப்பாக இந்தப் படம் மோசம் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
