Gatta kusthi 2 Prashanth Review - கட்டா குஸ்தி பிரசாந்த் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்
சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஹைப்போடு இன்று தியேட்டர்களில் படம் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தனது விமர்சனத்தை வீடியோவாக யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு அதே டீம் கட்டா குஸ்தி 2 படத்தில் இணைந்தது. இதனை விஷ்ணு விஷாலே தயாரித்திருக்கிறார். நேற்று திரையிடப்பட்ட ப்ரிவ்யூ காட்சியில் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இன்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையேயும் அதே மாதிரியான விமர்சனத்தைத்தான் படம் பெற்றிருக்கிறது.

பிரசாந்த் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "இது குடும்பங்களுக்கான படம் என்று ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இயக்குநர் உணர்த்திவிடுகிறார். அந்த குட்டி குழந்தை ஸாரா அவ்வளவு அழகாக நடித்திருக்கிறது. வளர, வளர அந்த குழந்தை நட்சத்திரம்; தெய்வ திருமகள் பட சாரா மாதிரி வளர்ந்துவிடுவார். அவ்வளவு க்யூட்டாக நடித்திருக்கிறது. இந்த வயதில் எப்படி இப்படி நடிக்கிறார் என தெரியவில்லை. அந்தக் குழந்தை மட்டும் செயற்கைத்தனமாக நடித்திருந்தால் இந்தப் படம் ஒர்க் அவுட் ஆகியிருக்காது.
நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள்: கமர்ஷியல் படம் என்று ஏனோதானோவென்றெல்லாம் எடுக்கவில்லை. அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. கருணாஸ் அரசியல் செய்வார்தான். ஆனால் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து தியேட்டரே சிரிக்கிறது. யோகிபாபு மட்டும்கெஸ்ட் ரோல் செய்து கொல்கிறார்.
விஷ்ணு விஷால் பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி ஒரு ஆளுமையாக ஜொலிக்கிறார். அவ்வளவு சூப்பராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கேமரா மேனை உண்மையில் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு ஃப்ரேமையும் மணி, மணியாக வைத்திருக்கிறார். லைட்டிங் எல்லாம் சூப்பராக இருக்கிறது. சிம்ப்பிளாக இருந்தாலும் அழகாக இருக்கிறது. கேமரா மாதிரியே ஷான் ரோல்டனின் இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தின் பாடல்கள் இனிமேல் வைரலாகும் என எதிர்பார்க்கிறேன்.
எடிட்டருக்கும் வாழ்த்து: அதேபோல் படத்தின் எடிட்டருக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். விட்டு விளையாடியிருக்கிறார். கடைசியில் வரும் சண்டை காட்சியும், கோர்ட் காட்சிதான் இந்தப் படத்தை குடும்ப படமாக மாற்றுகிறது. செல்லா அய்யாவு நமக்கு தேவையான இயக்குநர். அவர் இதே மாதிரி தொடர்ந்து நல்ல கமர்ஷியல் படங்களை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வசனத்திலும் விஷயங்களை வைத்துதான் எழுதியிருக்கிறார். குழந்தைகளை அழைத்துக்கொண்டு படம் பார்க்க செல்லுங்கள். பாக்யராஜ் ஸ்டைல் இதில் கொஞ்சம் இருக்கிறதுதான். அதை வல்கராக செய்யவில்லை.
ஆகமொத்தம் கட்டா குஸ்தி 2 நல்ல ஃபேமிலி படம். கண்டிப்பாக இது ப்ளாக் பஸ்டர் ஹிட்தான். அதில் சந்தேகமே வேண்டாம். இதே மாதிரி நிறைய கமர்ஷியல் படங்களை இந்த டீமிடமிருந்து எதிர்பார்க்கிறேன்" என்றிருக்கிறார். விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை கட்டா குஸ்தி 2 இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. குடும்ப ரசிகர்களும் படம் பார்க்க படையெடுப்பார்கள் என்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல இடத்தை அடையும் என்ற நம்பிக்கையும் திரைத்துறையில் பிறந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
