Isakapatnam Review - இசக்கப்பட்னம் விமர்சனம்.. ரொம்ப சோதிச்சிட்டாங்க.. எப்படி இருக்கு வெப் சீரிஸ்?
Star Cast: Samuthirakani, Aishwarya Rajesh, Sunil
Director: Garry BH
சென்னை: சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் இசக்கப்பட்னம். இதனை கேரி என்பவர் இயக்கியிருக்கிறார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸானது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் காண கிடைக்கிறது. அதன் விமர்சனத்தை இதில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டை சேர்ந்த சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இப்போது தெலுங்கு படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் அதிகம் தலைகாட்ட தொடங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் அவர்கள் இப்போது நடித்திருக்கும் வெப் சீரிஸ்தான் இசக்கப்பட்னம். கேரி பி.ஹெச் என்பவர் இயக்கியிருக்கும் இந்த சீரிஸில் இவர்களோடு சுனில் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். பிரவீன் இசையமைத்திருக்கிறார்.
என்ன கதை?: இசக்கப்பட்னம் என்ற துறைமுக நகரத்துக்கு பிழைப்பதற்காக வரும் நாயுடு (சமுத்திரகனி) ஒருகட்டத்தில் அந்த நகரத்தையே தன் கைகளுகுள் கொண்டுவந்து பெரிய புள்ளியாக வளர்கிறார். சமூக விரோத் செயல்கள் செய்யும் மகள் பாரதிக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்)அது பிடிக்கவில்லை. அதற்கு எதிர்த்து போராடுகிறார். ஆனால் கால சூழ்நிலை அவரையும் ரத்தம் பார்க்க வைத்துவிடுகிறது. அதற்கு பிறகு என்ன நடந்தது; நாயுடுவின் சாம்ரஜ்ஜியம் என்ன ஆனது உள்ளிட்ட விஷயங்கள்தான் கதை.

எப்படி இருக்கிறது?: கதை ரீதியாக எடுத்துக்கொண்டால் உலகம் முழுவதும் இந்த ஜானரில் எக்கச்சக்க படங்களும், வெப் சீரிஸ்களும் வந்துவிட்டன. அதனை சுவாரஸ்யமாக கொடுப்பதில்தான் விஷயமே இருக்கிறது. அப்படி பார்க்கையில் இயக்குநர் இதில் அநியாயத்துக்கு சொதப்பிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். வெப் சீரிஸின் டைட்டில் இசையும், மேக்கிங்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உள்ளே பெரிய அளவில் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
செயற்கைத்தனமான நடிப்பு: இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் நல்ல நடிகர்கள்தான். ஆனால் ஏன் என்று தெரியவில்லை இந்த சீரிஸ் முழுவதுமே அனைவருமே செயற்கைத்தனமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் சமுத்திரகனி டான் என்பதால் எப்போதும் 15 கடப்பாரையை விழுங்கிய மாதிரியே லுக் விடுவதும், நடப்பதும், பேசுவதும் என ரொம்பவே படுத்துகிறார். ஒருகட்டத்துக்கு மேல் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.
இசை கொஞ்சம் ஆறுதல்: ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான் கொஞ்சம் ஆறுதல் தருகிறார். முதல் சில எபிசோடுகளில் எதார்த்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தினாலும்; போகப்போக அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக மாறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். யாருமே தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. வெப் சீரிஸின் டைட்டில் இசையும், சில இடங்களில் மட்டும் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கின்றன.
கேமரா ஓகே: அதேபோல் வெப் சீரிஸில் கேமரா ஒர்க் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கிறது. துறைமுக நகரத்தை எவ்வளவு இயல்பாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு இயல்பாக காண்பித்திருக்கிறார். எடிட்டிங்கை பொறுத்தவரை தயவு தாட்சண்யமே பார்க்காமல் இன்னும் கொஞ்ச சீன்களை வெட்டி தூர எறிந்திருக்கலாம். வெப் சீரிஸின் பல இடங்களில் நடிகர்கள், நடிகைகளின் நடிப்பை பார்க்கையில்; போதும் எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறும் நிலைமைதான் இருந்தது.
இதெல்லாம் ஓவர் பாஸ்: நாயுடு தன் சாம்ராஜ்ஜியத்தை உயர்த்தினார் ஓகே. ஆனால் அதை எப்படி உயர்த்தினார், அதற்காக அவர் எதையெல்லாம் இழந்தார் என்ற விவரங்கள் கொஞ்சம்கூட இல்லை. ஏதோ பெட்டி கடையில் வாங்கியது போல் அவ்வளவு எளிதாக அவரிடம் அதிகாரங்கள் வந்து சேர்ந்ததை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி ஏகப்பட்ட ஓட்டைகள் அந்த வெப் சீரிஸில் கொட்டி கிடக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.கேங்ஸ்டர் கதை என்றாலே மினிமம் கியாரண்டியோடு கல்லா கட்டிவிடும். அதற்கு இயக்குநர் கொஞ்சமேனும் அதில் சுவாரஸ்யத்தை சேர்க்க வேண்டும். இதில் இயக்குநர் அப்படி ஒன்றை மறந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகமொத்தம் இசக்கப்பட்னம் வெப் சீரிஸ் ஜஸ்ட் பாஸ் கூட ஆகவில்லை.


Click it and Unblock the Notifications
