பரிமளா & கோ படத்தில் கருத்தூசி போடுறாங்க.. எல்லாமே தப்பு.. ப்ளூ சட்டை மாறன் சுளீர் விமர்சனம்
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் பக்கத்தில் இந்தப் படத்தின் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. ஓரளவுக்கு எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் ப்ரிவியூ ஷோவில் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. திரையரங்குகளுக்கு நேற்று அப்படம் வந்தது. ரசிகர்களும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். வசூலிலும் முதல் நாளான நேற்று மொத்தம் 1.19 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "திரிஷ்யம் படத்தை மனதில் வைத்துதான் இந்தப் படத்தை எடுத்திருப்பார்கள். ஆனால் படம் பார்க்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே இந்தப் படம் உருப்படப்போவதில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது. காரணம் என்னவென்றால் இந்த நான்கு பேரும் கொலையை செய்திருக்கமாட்டார்கள். அப்படியே செய்திருந்தாலும் இவர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் ஆரம்பத்திலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டியதாகியிருக்கிறது.
மேம்போக்கான திரைக்கதை: இதே திரிஷ்யம் படத்தை எடுத்துக்கொண்டால்; மோகன் லால் ஹீரோவாக இருந்தாலும்; அவர் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றிவிடுவார் என்ற எண்ணமெல்லாம் நமக்கு வராது. அவர்கள் செய்திருந்த ஸ்க்ரீன்ப்ளேவில், மோகன் லால் குடும்பம் மாட்டிக்கொள்ளுமோ? மோகன் லாலால் குடும்பத்தை காப்பாற்ற முடியாதோ? என சீரியஸாக கொண்டு சென்றிருப்பார்கள். ஆனால் இங்கே மேம்போக்காகவே திரைக்கதையை செய்திருக்கிறார்கள்.
இதுதான் பிளான்: இவர்களுடைய பிளான் என்னவென்றால் படத்தை காமெடியாக ஆரம்பித்து சீரியஸாக கொண்டு போவது என்பதுதான். ஆனல் அது எப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றால் ஸ்பூஃபாக ஆரம்பித்து ஸ்பூஃபாகவே போய்க்கொண்டிருந்தது. காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. எந்த சீரியஸ் மோடுக்கும் படம் போகவே இல்லை. வில்லன் கொல்லப்பட வேண்டியவன். அவனை கொன்றுவிட்டார்கள். படத்தை அதோடு முடித்திருக்கலாம்.அதற்கு பிறகு பார்த்தால் வில்லனை நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எடுத்துக்கொண்ட கதையை இவர்களே தவறாக புரிந்துகொண்டு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
கருத்தூசி போட்டுவிட்டார்கள்: இந்தப் படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் சீன் என்றால் போலீஸ் இன்வஸ்டிகேஷன் ஏரியாதான். ஆனால் இந்த போலீஸ் அதிகாரியோ போண்டா, பஜ்ஜியை தின்றுகொண்டிருக்கிறார். பற்றாக்குறைக்கு பானி பூரியையும் பிடுங்கி தின்கிறார். படம் ஆரம்பித்து இரண்டரை மணி நேரத்தில் கதையை எங்கெங்கோ கொண்டு சென்றுவிட்டு; கடைசி அரை மணி நேரத்தில் ஒரு கருத்து சொல்லி கருத்தூசி போட்டார்கள். யோகி பாபு அடிக்கும் காமெடிக்கு எல்லாம் கோபம்தான் வந்தது.
டைட்டிலே தப்பு: சில படங்கள் எல்லாம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தவறாக எடுத்து வைத்திருப்பார்கள். இவர்களோ டைட்டிலேயே தவறாக வைத்திருக்கிறார்கள். பரிமளா & கோ என்று வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஜெயராம்தான் பரிமளா. ஏன் அவருக்கு அந்த பெயர் என்றால் அதெல்லாம் தெரியாது. நீங்கள் இந்தப் படத்தை பார்த்தால் உனக்கு டைட்டில்தான் பிரச்னையா என்று கேட்பீர்கள். அதற்கு பிறகு உங்கள் இஷ்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications
