சிக்கலில் 'கஜினி' தயாரிப்பாளர்!

கஜினி படத் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன். சுள்ளான் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே தோல்விப் படங்கள்தான். கஜினி மட்டுமே மாபெரும் வெற்றி பெற்ற படம்.
இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்தியில் அமீர் கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சேலம் போலீஸில் சந்திரசேகரன், முருகதாஸ் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில், இந்தி ரீமேக் உரிமை தொடர்பாக தன்னை முருகதாஸ் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.
இந்தப் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சேலம் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்ததாம். இருப்பினும் அதையும் மீறி சென்னைக்கு வந்த சேலம் போலீஸார், எழுத்தாளர் சுஜாதா வீட்டுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த முருகதாஸை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சேலம் கொண்டு செல்ல முயன்றனர்.
இருப்பினும் சில பல முயற்சிகளினால் சேலம் போலீஸார் தடுக்கப்பட்டு முருகதாஸ் காப்பாற்றப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து முருகதாஸ் கூறுகையில், இது பொய்யான புகார். படத்தின் ரீமேக் உரிமை குறித்து சேலம் சந்திரசேகரனுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அவர் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்திடம்தான் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனர்தான் இந்த அல்லு அரவிந்த்) கேட்க வேண்டும்.
காரணம், இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் கஜினியை ரீமேக் செய்யும் உரிமை அவரிடம்தான் உள்ளது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார் முருகதாஸ்.
இதற்கிடையே, சந்திரசேகரனுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். பிரச்சினையை முதலில் இங்குதானே சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஏன் போலீஸுக்குப் போனீர்கள் என்று விளக்குமாறு சந்திரசேகரனுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாம். .
'முருகதாஸ்'... இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!


Click it and Unblock the Notifications











