அமிதாப் பச்சன் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் 'பிக் பீ' மற்றும் 'ஷாஹேந்ஷா' என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் 'கோபக் கனல் வாலிபன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.
பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.
பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளுக்கு ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான ஐஸ்வர்யராயை மணந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக்குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். அவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக்கவிஞர் ஆவார். அவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான், அன்றைய பைஸாலாபாத்தை சேர்ந்த ஒரு சீக்கியப்பெண்மணி ஆவார். ஆரம்ப காலத்தில் பச்சன் 'இன்குலாப்' என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ' அணையவே அணையாத சுடரொளி' என்பதாகும்.[3]ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மருவி விட்டது.
அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் மேடைநாடகங்களில் நடித்துள்ளார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணிவாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் பெறுவதையே வலியுறுத்தி வந்தார். ஆரம்பக்கல்வியை அலகாபாத் ஞான பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.அதன்பின் டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த 'பேர்ட் அண்ட் கோ' கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். தணியாத தாகம் நடிப்பின்மேல் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார்.
1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை ஜெயபாதுரியை, வங்காளத்திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் பிறந்தனர் . மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள்.
1984ல் அமிதாப் நடிப்புத்துறையில் இருந்து விலகிக்கொண்டு அரசியல் துறையில் குறுகிய காலத்திற்குள் நுழைந்தார் அவருடைய குடும்ப நண்பர் ராஜிவ்காந்தியின் ஆதரவே அதற்குரிய காரணமாகும். அலகாபாத் தொகுதியில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் எதிர்த்துப் போட்டியிட்டார். அப்பொதுத் தேர்தலில் எச்.என்.பகுகுணாவை அதிக பட்ச வாக்குகள் வித்தியாசம் காட்டி (68.2 சதவீதம் வாக்குகள் வென்றார். ஆனாலும் அவரது அரசியல் வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை! மூன்றே ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அரசியலே ஒரு குட்டை என்று சொல்ல நேர்ந்தது. அதன்காரணமாவது அவரும் அவரது சகோதரரும் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என்று வெளிவந்த பத்திரிகைச்செய்தி அவரை நீதிமன்றம் போகச்செய்து குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியே அவர் பதவி விலகினார்.
பச்சன் தனது ஆழ்ந்த ஏற்றஇறக்கம் காட்டும் குரல்வளத்திற்குச் சொந்தக்காரர் ஆவார். அந்தநேர்த்தியான குரலால் கதைசொல்பவர், பின்ணணிப்பாடகர், நிகழ்ச்சி வழங்குநர் ஆகிய பலபணிகளை மேற்கொண்டார். புகழ்பெற்ற வங்க இயக்குநர் சத்யஜித்ரே அவரது அபாரக்குரல்அழகால் அதன்மேல் நல்அபிப்பிராயம் கொண்டிருந்ததால், தன் 'ஷத்ரன்ஜ் கி கிலாடி' படத்திற்காக விளக்கஉரையாளராகப் பயன்படுத்திக்கொண்டதும் பெருமைதரும் சம்பவமாகும். அப்படத்தில் அமிதாப்பிற்கேற்ற வேடம் அமைந்தது. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் பச்சன் திரைபடத்துறைக்கு வருமுன் அகிலஇந்தியவானொலி அறிவிப்பாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டதும் காரணம் ஆகும்.