twitter
    Celebs»Balu Mahendra»Biography

    பாலு மகேந்திரா பயோடேட்டா

    பாலு மகேந்திரா இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

    அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர்.