twitter

    மேஜர் சுந்தராஜன் பயோடேட்டா

    மேஜர் சுந்தரராஜன் 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இளமையில் தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் பட்டினத்தார் என்ற திரைப்பட்டத்தில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் கௌரவம், எதிர்நீச்சல், பாமா விஜயம், அபூர்வ ராகங்கள், தெய்வமகன், தெய்வச்செயல் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார். இவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

    இவர் தனது 67 -வது வயதில், 2003 -ம் ஆண்டு பிப்ரவரி 28 -ம் நாள் இயற்க்கை எய்தினார்.