மாலினி சாத்தப்பன், தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். 2013 ஆம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கஃபே" என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான இவர், தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான "இனம் (சிலோன்)" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நாயகியின் தோழி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.
பிறப்பு
தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், தஞ்சாவூரில் 14 நவம்பர் 1996 ஆம் தேதியில் பிறந்துள்ளார். இவரது தந்தை சாத்தப்பன் இந்திய இராணுவத்திலும், தாயார் சீதாலெட்சுமி கனடா மருத்துவ பணியில் உள்ளனர்.
மாலினி சாத்தப்பன் தனது பள்ளி படிப்பை தஞ்சாவூர் மற்றும் சென்னையில் பயின்றுள்ளார். தனது மேல்நிலை உயர் கல்வியை ராஜஸ்தான் மாநிலத்தில் படித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரத்தில் தனது இளங்கலை பட்டமாக கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்று ஒரு மருத்துவராக பட்டம் வென்றுள்ளார்.
திரையுலக தொடக்கம்
மருத்துவ துறையில் மருத்துவராக பட்டம் வென்றுள்ள இவர், தனது கல்லூரி காலத்தில் மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் இந்திய திரைத்துறையில் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகினாலும், பின் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பினை பெற்று தமிழில் ஒரு நடிகையாக அங்கீகாரத்தினை பெற்று நடித்து வருகிறார்.
தொடர்ந்து துணை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், தமிழில் ஆதித்ய வர்மா, பாரிஸ் பாரிஸ், சூரரைப் போற்று போன்ற தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படங்களில் ஒரு துணை நடிகையாக நடித்துள்ளார்.