twitter
    Celebs»Vaali»Biography

    வாலி பயோடேட்டா

    கவிஞர் வாலி  தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .

    தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

    சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    பெரும் புகழுடைய வாலி அவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.