ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படமாகும். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தமிழ் மற்றும் இந்தியா திரைப்பட ரசிகர்கள் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ல் 'அமேசான் பிரைம் வீடியோ' இணையதள ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜெய் பீம் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவார மக்கள் மற்றும் அவர்களது சமூகத்தினரின் மீது சுமத்தி வழக்குகளை முடிக்கின்றனர். காவலர்களால் பாதிக்கப்பட்ட மலை அடிவார மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி தீர்ப்பை வழங்குகிறார், நாயகன் சூர்யா. இப்படம் 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.
கதை
மலையடிவார மக்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து அதிகாரிகளை கண்டித்து போராடிய வழக்கறிஞர் சந்துருவின் உண்மை கதை.
1993 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மலை அடிவாரத்தில் வாழும் பழங்குடியினர் பொருளாதார ரீதியாகவும், கல்வி அறிவு இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். காவலர்கள் அவர்களுது கடமையை நிறைவேற்ற பழங்குடி மக்களை தாக்கி அவர்களுது மீது பொய் வழக்குகளை சுமத்தி சிறையில் அடைகின்றனர். காவலர்களின் இந்த அநாகரீகமான செயல்களை கண்டித்து நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடங்கி தீர்வு காண்கிறார் சந்துரு (சூர்யா).
கிராம தலைவரின் இல்லத்தில் ஒரு திருட்டு நடக்கிறது. அந்த திருட்டிற்கு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் ராஜ கண்ணு (மணிகண்டன்) காவலர்களால் கொடூரமாக தாக்க படுகிறார். ராஜ கண்ணுவின் மனைவி செங்கனி (லிஜிமோல்) மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு கட்டத்தில் ராஜ கண்ணுவை காணவில்லை என காவர்களால் மீண்டும் செங்கனியை தொந்தரவு செய்ய, பின் செங்கனி சில சமூக ஆய்வாளர்களின் உதவியோடு வழக்கறிஞர் சந்துரு (சூர்யா)வை சந்திக்கிறார். சந்துரு சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வழக்கினை நீதிமன்றத்தில் தொடங்குகிறார்.
சந்துரு தொடர்ந்த இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. இதனை தொடர்ந்து அரசாங்க அதிகாரிகள் பலரின் முகத்திரையை கிழித்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறார், சந்துரு.
காவலர்களால் கைது செய்யப்பட்ட ராஜ கண்ணுவுக்கு என்ன ஆனது? அவருடன் இருந்த அவரின் தம்பி மற்றும் உறவினர் எங்கே? இவர்களை கண்டறிந்து இவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் கதை.