மதுர வீரன் கதை

  மதுர வீரன் அறிமுக இயக்குனர் பி ஜி முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி நடித்த அதிரடி திரைப்படம்.


  கதை : 

  சமுத்திரக்கனி அந்த ஊரில் பெரிய மனிதர். விவசாயம் தொடங்கி கலாச்சாரம் வரை மக்களுக்காகப் பாடுபடுபவர் என்பதால் அவருக்கு ஊரில் நல்ல மரியாதை. ஜல்லிக்கட்டில் மேல் சாதி, கீழ் சாதி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இணைந்து பங்குபெற்று நடத்தவேண்டும் என்பதே அவர் விருப்பம். மேல்சாதிக்காரர் வேல.ராமமூர்த்தியும், கீழ்சாதிக்காரர் மைம் கோபியும் அவருக்கு எதிராக நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டில் தன் மாட்டைத் தொட்டவரின் கையையே வெட்டத் துடிக்கும் வேல.ராமமூர்த்தியின் மாடு அந்த ஜல்லிக்கட்டில் பிடிமாடாகிறது. பிடித்தது கீழ்சாதியைச் சேர்ந்த மைம்கோபியின் ஆள். அவமானத்தில் வாடிவாசலில் இருந்து கோபமாகக் கிளம்புகிறார் வேல.ராமமூர்த்தி.

  அன்றே இரவோடு இரவாக மைம் கோபியின் அண்ணன் சிலரால் கழுத்தறுக்கப்படுகிறார். அதே நேரத்தில் வேல.ராமமூர்த்தியின் தம்பியும் திட்டமிட்டுக் கொல்லப்படுகிறார். இருதரப்பும் மாற்றி மாற்றிக் கொலைசெய்துகொண்டதாக எல்லோரும் நம்புகிறார்கள். ஊரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸில் வழக்கு பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தையோடு முடித்து விடுகிறார்கள். இந்நிலையில், சமுத்திரக்கனியும் தனது ஊருக்குச் செல்லும் வழியில் சிலரால் கொல்லப்படுகிறார். சமுத்திரக்கனியைக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு, சமுத்திரக்கனியின் மனைவி, சிறு வயது மகன் இருவரும் சமுத்திரக்கனியின் மைத்துனருடன் மலேசியாவுக்கு சென்று செட்டில் ஆகிறார்கள்.

  பெரியவனானதும், திருமணம் செய்வதற்குப் பெண் தேடி மதுரைக்கே வருகிறார்கள். ஆனால், சண்முக பாண்டியன் வந்தது தன் அப்பாவை யார் கொன்றது என அறிந்துகொள்வதற்காகத்தான். அதனால், பார்க்குப் பெண்களையெல்லாம் பிடிக்கவில்லை எனத் தட்டிக் கழிக்கிறார். இதற்கிடையே, சமுத்திரக்கனி மறைவுக்குப் பிறகு இருபது வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்தாமல் ஊரே ரெண்டுபட்டுக் கிடக்கிறது. எனவே, ஊரார் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு நடத்த முடிவெடுக்கிறார்கள். ஆனால், இப்போதும் வேல.ராமமூர்த்தியும், மைம் கோபியும் குறுக்கே கட்டையைப் போடுகிறார்கள். இவர்களை மீறி சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டை நடத்தி ஊரை ஒன்று சேர்த்தாரா, தன் அப்பாவைக் கொன்றவனைக் கண்டுபிடித்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie மதுர வீரன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).