மீசைய முறுக்கு கதை

  மீசைய முறுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி தானே இயக்கி நடித்து, இசையமைக்கும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இத்திரைப்படத்தை சுந்தர் சி தயாரிக்க, விவேக், ஆத்மீகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

  கதை
   
  கோயம்புத்தூரைச் சார்ந்த ஆதி மற்றும் ஜீவா ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதியின் தந்தை இராமச்சந்திரன் ஆதியின் இசையார்வத்திற்கு ஆதரவளிப்பவராக உள்ளார். ஆதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் போது அவரது கல்லூரித் தோழி நிலாவைக் (பள்ளியிலிருந்தே குழந்தைப் பருவ நட்பிலிருந்தவர்) காதலிக்கிறார். நிலா செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பெற்றோர் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டோராவர். ஆதியின் பெற்றோரிடம் சென்று தம் மகளுடன் ஆதி பழகுவதை எதிர்த்து மிரட்டிவிட்டு வருகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நிலாவின் பெற்றோர்கள் அவளை ஆதியைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அறையில் வைத்து பூட்டி வீட்டுக் காவலில் வைக்கின்றனர்.

  ஆதி தனது தமிழ் ராப் இசைப் பாடல்களுக்காக கல்லூரியில் மிகவும் பிரபலமாகிறார். அவர் யூடியூபில் கிப்கொப் தமிழா என்ற பெயரில் ஒரு பக்கத்தை சொந்தமாகத் தொடங்குகிறார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று தனித்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற தனது ஆசையைத் தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆதியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்குமாறும் அவ்வாறு தன்னால் வெற்றி பெற இயலாவிட்டால் தான் திரும்பி வந்து விடுவதாகவும் தெரிவித்து தந்தையை சமாதானம் செய்கிறார். ஆதி சென்னையை அடைந்து வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்கிறார். ஆனால், எல்லாம் வீணாகிறது. ஓராண்டு முடிந்த பிறகு கோவை திரும்ப முயற்சிக்கும் போது, கடைசி நாளில், ஆதி வானொலி தொகுப்பாளர்  மா கா பா ஆனந்தைச் சந்திக்கிறார். பண்பலை வானொலி நிலையமான ரேடியோ மிர்ச்சி அவருக்கு ”கிளப்புல மப்புல” என்ற பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆதி கோவை திரும்புகிறார்.

  ஆதியின் தந்தையின் விருப்பத்தின் பேரில் ஆதி முதுகலை வணிக மேலாண்மை படிப்பிற்கு சென்னையில் விண்ணப்பிக்கிறார். திடீரென, ஆதி  "கிளப்புல மப்புல" பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுவதை அறிகிறார். ஆதியின் நம்பிக்கை புத்துயிர் பெறுகிறது. ஆதி இசைத்துறையில் தனது வாய்ப்பைத் தேடும் முயற்சியைத் தொடரப் போவதாகவும், அதே நேரத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்து விடுவதாகவும் உறுதியளித்து சென்னை கிளம்புகிறார்.

  நிலாவின் பெற்றோர் நிலாவின் திருமணத்தை உறுதி செய்ததை அறிந்து ஆதி அதிர்ச்சி அடைகிறார். ஆதி நிலாவைச்  சந்தித்து இன்னும் ஓராண்டு மட்டும் தனக்காகக் காத்திருக்கும்படி வேண்டுகிறார். இதற்கு நிலா ஏற்கெனவே தான் ஓராண்டு காலம் காத்திருந்து விட்டதாகவம், இனியும், தன்னால் காத்திருக்க இயலாதென்றும் தெரிவிக்கிறார். ஆதி மனமொடிந்து சென்னையை விட்டுத் திரும்புகிறார். நிலா தனது பெற்றோரின் விருப்பப்படி மணம் முடிக்கிறார். அதே நேரத்தில், ஆதி கிப்கொப் இசையில் புகழ்பெற்ற ஆளுமையாகிறார்.
  **Note:Hey! Would you like to share the story of the movie மீசைய முறுக்கு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).