twitter

    வாகை சூட வா கதை

    வாகை சூட வா, 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இதனை இயக்கியவர் ஏ. சற்குணம். இந்த இயக்குனருக்கு இது இரண்டாவது திரைப்படம். அவரது முதல் படமான களவாணி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் விமல், இனியா, முக்கிய கதாபாத்திரங்களிலும் கே. பாக்கியராஜ், பொன்வண்ணன், தம்பி ராமய்யா ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் கதை, தமிழ்நாட்டில் 1960 இல் தமிழ்நாட்டின் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் நடப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளது இத்திரைப்படம்.

    கதை: 

    வேலுத்தம்பி (விமல்) ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலைக்குக் காத்திருக்கும் இளைஞன். அவனை எப்பாடுபட்டாவது அரசாங்க வேலையில் சேர்ப்பதற்கு முயலும் தந்தையாக பாக்கியராஜ் நடித்துள்ளார். கிராம சேவா என்ற சமூக நல அமைப்பு 6 மாத காலம் கிராமத்திலுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரும் இளைஞர்களுக்கு சம்பளமும் முடிவில் ஒரு சான்றிதழும் வழங்க முன்வருகிறது. அந்தச் சான்றிதழ் அரசு வேலைக்கு உதவும் என்பதால் தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்கு பாடம் சொல்லித்தர வேலுத்தம்பி செல்கிறான்.

    அவ்வூரில் குழந்தைகள் செங்கல் சூளையில் வேலை செய்யும் அவல நிலையும் சரியான கூலி கூடத் தராமல் அங்குள்ள மக்களைக் கொத்தடிமைகளாக மாற்றி வைத்திருக்கும் செங்கல் சூளை முதலாளியின் (பொன்வண்ணன்) அக்கிரமும் சேர்ந்து அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் அரசு வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு அந்தக் குழந்தைகளுக்காக அந்த ஊரிலேயே தங்க முடிவு செய்கிறான்.

    வாத்தியாரின் அப்பாவித்தனமும் குழந்தைகளின் துடுக்குத்தனமும் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளாக காட்டப்பட்டுள்ளன. இக்கதை மண்ணின் மணத்தோடு சுவைபட படமாக்கப்பட்டுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie வாகை சூட வா with us? Please send it to us ([email protected]).