சோனம் வாங்சுக் உண்ணவிரதம்.. ஒருவழியாக வாயைத் திறந்த பாலிவுட் பிரபலங்கள்.. டீப் சைலண்ட்டில் கோலிவுட்
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அதனால் இறந்த மாணவர்களுக்கான நீதி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கியது காக்ரோச் ஜனதா கட்சி. இந்த போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கல்வியலாளர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28ஆம் தேதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 20 நாட்களாக அவரது போராட்டம் நீடித்து வருகிறது. மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லாமல் இருக்கும் சூழலில் எதிர்க்கட்சியினர் பலரும் சோனம் வாங்சுக்கைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அமீர் கான் கூறுகையில், " சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மற்றும் வாழ்க்கை குறித்து நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையில் இருக்கிறோம். இந்த விவகாரம் நல்ல முறையில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, தனது உடல்நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பலரது விருப்பமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது 3 இடியட்ஸ் படத்தில் அமீர் கான் ஏற்று நடித்த கதாபாத்திரம் சோனம் வாங்சுக்கை இன்ஸ்ஃபயர் செய்ததுதான் என்று பலரும் தெரிவித்து வருவது தொடர்பாக அமீர் கான் கூறிய கருத்து பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, அது உண்மையில்லை. அதுவொரு தவறான கருத்து. நாங்கள் அந்தப் படத்தை எடுக்கும்போது எனக்கு சோனம் வாங்சுக் பற்றித் தெரியாது. எனக்கோ, இயக்குநர் ராஜுவுக்கோ அல்லது எழுத்தாளர் அபிஜாத் ஜோஷிக்கோ சோனம் பற்றி அப்போது தெரியாது" என்று தெரிவித்தார்.
அவரது உண்ணாவிரதம் குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறுகையில், சோனம் வாங்சுக் யார், அவர் நாட்டிற்காக என்ன செய்துள்ளார், அவரது சாதனைகள் என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் அவர் கடந்த 20 நாட்களாக எதையும் சாப்பிடாமல், குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் இதையெல்லாம் யாருக்காகச் செய்கிறார்? யாருடைய எதிர்காலம் வீணாகப் போய்விடும் என்று பயப்படுகிறார்? நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் பாதிக்கப்பட்டு, தங்களின் உயிரை இழந்த குழந்தைகளுக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். சரியாகச் செயல்படாத ஒரு அமைப்பிற்கு எதிராக அவர் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஏன் யாரும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? யாருக்கும் இதைப் பற்றி கவலையில்லை என்பது போல் தெரிகிறது. யாரும் இதைப் பற்றி பேசவும் முன்வருவதில்லை, பேச்சுவார்த்தைக்காக கூட யாரும் வரவில்லை. அவரைத் திரும்பிப் பார்க்கக் கூட அரசு தரப்பில் தயாராக இல்லை. நானும் நாட்டின் நலனையே விரும்புகிறேன், நான் ஒன்றும் தேச விரோதி அல்ல. அப்படியிருக்கையில், இந்த முக்கிய விவகாரத்தில் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?.
சோனம் வாங்சூக்கிடம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு தான் கூறப் போவதில்லை. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம்? அந்த மனிதருக்கு ஏதேனும் ஏற்பட்ட பிறகுதான் நாம் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக பேசுவோமா? அப்படி ஒருவேளை அவரது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டுவிட்டால், ஏதேனும் நேர்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த கேள்வியும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் கோலிவுட்டில் இருந்து முன்னணி நடிகர்களும் நடிகைகளும் கப்சிப் என இருப்பதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

