Jana Nayagan Second Single - ஜனநாயகன் இரண்டாவது சிங்கிள்.. டைட்டிலில் சி.எம் விஜய்.. பாட்டு சூப்பர்
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை கடந்து ஜூலை 23ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரிலீஸுக்கான வேலைகள் எல்லாம் பரபரத்திருக்கின்றன. படத்தின் டைட்டில் கார்டில், 'தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நடிக்கும்' என்று இடம்பெறும் எனவும் தெரிகிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய்; ஜனநாயகன் படம்தான் கடைசி என்று அறிவித்திருந்தார். எனவே அவரது "ஒன் லாஸ்ட் டான்ஸ்" பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்த படம் சிக்கலை சந்தித்தது. எப்படியாவது சான்றிதழை பெற்றுவிட வேண்டும் என படக்குழு எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகின. எனவே கேவிஎன் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. அங்கேயும் சாதகமான சூழ்நிலை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டு; மறு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது.

லீக்கான படம்: மறு தணிக்கைக்கு வந்தபோதும் அதிகாரிகள் படம் பார்க்காமல் இழுத்தடித்துவந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் இணையத்தில் முழு படமும் லீக்காகி பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையும் இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவித்தது. மொத்தம் ஐந்துக்கும் மேற்பட்டோர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்கள். இதெல்லாம் திட்டமிட்ட சதி என்பது விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஆணித்தரமான கருத்து ஆகும்.
கிடைத்த சான்றிதழ்: ஒருவழியாக சில வாரங்களுக்கு முன்பு படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள்; ஏ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். ஏ சர்ட்டிஃபிக்கேட் கிடைத்தது அதிர்ச்சியாக இருந்தாலும்; எப்படியோ ஒரு சான்றிதழ் இப்போதாவது கிடைத்துவிட்டதே என்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் ரசிகர்கள். படமானது ஜூலை 23ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் ரிலீஸையொட்டி ஜிவி பிரகாஷின் இம்மார்ட்டல், ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படங்கள் எல்லாம் தள்ளிப்போகின்றன.
டைட்டில் கார்டில் இப்படித்தான்: இப்போது விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அவர் சி.எம் ஆன பிறகு இந்தப் படம் ரிலீஸாவதால் டைட்டில் கார்டில், 'தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்' நடிக்கும் என வாசகமும் இடம்பெறவிருக்கிறது. அந்த வாசகம் வரும்போது தியேட்டரே ரசிகர்களால் அதிரப்போகிறது என்பது மட்டும் உண்மை. நிச்சயம் இப்படத்தை மெகா ஹிட்டாக்கி; விஜய்க்கு சிறப்பான ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்பதில் முழு மூச்சாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.
இரண்டாவது சிங்கிள்: ஏற்கனவே படத்திலிருந்து தளபதி கச்சேரி என்ற பாடல் ரிலீஸாகி பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்கிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது சிங்கிள் இன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 'அடியே என் பூந்தேனே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை கார்த்திக் நேத்தா எழுத; அனிருத்தே பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மகளை பற்றியதாக அமைந்திருக்கிறது. கேட்பதற்கு மெலோடியாக இருக்கும் அடியே பூந்தேனே அனைவரையும் கவர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இந்தப் பாடலிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் தளபதி ரசிகர்களிடம் உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications

