ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூரிக்கு கெட்டப் மட்டுமில்ல டயலாக்கும் சூப்பரா இருக்கே
சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்தையும் வெறும் பொழுதுபோக்கு படமாக இல்லாமல், வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் உணர்வுகளின் பயணமாக உருவாக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் ராம். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நடிகர் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் கதாபாத்திரங்கள் ஒரு சில நொடிகள் மட்டுமே இடம்பெற்றாலும், படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யானை, எலி உள்ளிட்ட விலங்குகளின் காட்சிகளும், இயற்கை சூழல்களும் கவனத்தை ஈர்க்கின்றன. பின்னணியில் இயக்குநர் ராம் தனது குரலில் அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிப்பதும் வீடியோவுக்கு தனி பலமாக அமைந்துள்ளது.
இந்த படம் மீது இவ்வளவு எதிர்பார்ப்பு உருவாக முக்கிய காரணம், இது ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுகளைப் பெற்றிருப்பதுதான். உலகின் முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படம், வெளிநாட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சில திரையிடல்களில் பல நிமிடங்கள் ஸ்டாண்டிங் ஓவேஷன் கிடைத்ததும் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போனது. ஒவ்வொரு முறையும் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது படக்குழுவே அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக அறிவித்திருப்பதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் முறையாக: 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி முதன்முறையாக இயக்குநர் ராமுடன் இணைந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடித்திருப்பது படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் பல முக்கிய நடிகர்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்பார்ப்பு: படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராமின் படங்களுக்கு யுவன் அமைக்கும் இசைக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை இன்னும் வலுவாக கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை என்.கே. ஏகாம்பரம் கவனித்துள்ள நிலையில், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் மிக உயர்ந்த தரத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications

