லிங்குசாமி பயோடேட்டா

    லிங்குசாமி, தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் என்னும் ஊரில் நம்மாழ்வார் – லோகநாயகி இணையருக்கு மகனாக 1969 ஆண்டில் லிங்குசாமி பிறந்தார். இராதாகிருட்டிணன், கேசவன், சுபாசுசந்திரபோசு ஆகியோர் இவருக்கு உடன்பிறந்தவர்கள்.

    லிங்குசாமி தனது தொடக்கக் கல்வியை (முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இலட்சுமிபுரத்தில் உள்ள எசு. ஆர். வி. எசு. நடுநிலைப் பள்ளியில் பெற்றார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் லிங்குசாமியின் குடும்பம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தனர். எனவே, லிங்குசாமி தனது நடுநிலைப் பள்ளிக் கல்வியை (6, 7, 8ஆம் வகுப்புகள்) மூலங்குடியில் உள்ள தூய வளனார் பள்ளியில் பெற்றார். பின்னர் மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை (9, 10 வகுப்புகள்), மேல்நிலை (11, 12 வகுப்புகள்) கல்வியைப் பெற்றார். பின்னர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று கலை இளவர் பட்டம் பெற்றார்.