அரண்மனை 3 கதை

  அரண்மனை 3 இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்ற அரண்மனை (2014), அரண்மனை 2 (2018) திரைப்படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

  அரண்மனை 3 படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் சி தனது 'அவ்னி சினிமேக்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். இப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 2021 அக்டோபர் 14ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

  நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் செய்துள்ளார். சுந்தர் சி - குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த இத்திரைப்படத்தினை, உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார்.
  அரண்மனை 3 படத்தின் கதை

  கதைக்கரு: ஒரு அரண்மனையில் சிலரின் துரோகம் மற்றும் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட ஆண்ட்ரியா ஆவியாக அதே அரண்மனையில் வன்மத்தோடு பழிவாங்க காத்துக்கிடக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட்ரியாவை கொலை செய்த கும்பல் அந்த அரண்மனைக்கு வருகை தருகின்றனர். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.

  கதை

  ஜமீன் (சம்பத்) ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார், அங்கு மணப்பெண்ணாக இருக்கும் ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்கிறார். பின் ஆண்ட்ரியாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. சிலரின் சூழ்ச்சியில் ஆண்ட்ரியா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். பின் அதே அரண்மனையில் ஆவியாக சுற்றி திரிகிறார் ஆண்ட்ரியா.

  சிறுவயதில் நடிகை ராசிகன்னா அந்த அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி அலறுகிறார், ராசி கன்னாவை வெறுக்கும் அவரின் தந்தை சம்பத், ராசி கண்ணாவை ஒரு விடுதியில் சேர்த்து படிக்க வைக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு தனது படிப்பினை முடித்துவிட்டு அரண்மனை திரும்பும் ராசி, ஒரு நாள் இரவு மீண்டும் அரண்மனையில் பேய் இருப்பதை தெரிந்துகொள்கிறார் ராசி கன்னா. இரு முறை தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் பேயிடம் இருந்து விதி வசம் தப்பித்து விடுகிறார்.

  ராசி கன்னாவிடம் தனது காதலை சொல்ல துடிக்கும் நடிகர் ஆர்யா, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார். ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் இவர்கள், இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அரண்மனை 3 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).