தேவராட்டம் தமிழ் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் முத்தையா இயக்க, கெளதம் கார்த்திக், சூரி, மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார்.
கதை
மதுரையைக் கலக்கும் மிகக் கொடூரமான தாதா பெப்சி விஜயன். எல்லா வில்லன்களையும் போல், வெளியில் தான் வில்லன், வீட்டுக்குள் பாசமான தந்தை. தவமாய் தவமிருந்து ஒரு பிள்ளைக்கு தகப்பனாகிறார். அதனால் உயிருக்கு உயிராக மகனை அவர் வளர்க்கிறார். இது ஒருபுறம் இருக்க, ஆறு பெண் குழந்தைகளுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் வேல.ராமமூர்த்தி. அவரது மூத்த மகள் வினோதினியும் கர்ப்பமாக இருக்க, மனைவியும் கர்ப்பமாக இருக்கிறார். ஒரே நேரத்தில் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. இதற்கிடையே ஒரு பிரச்சினையில் வேல.ராமமூர்த்தியை கொலை செய்து விடுகிறார் பெப்சி விஜயன்.
இது எல்லாம் வெறும் பிளாஷ் பேக் தான். பிளாஷ் பேக் முடிந்து, கட் பண்ணி ஓபன் செய்தால், 25 வருடங்களுக்கு பின்பு தாவிச் சென்று நிற்கிறது கதை. ஆனால், அப்போதே நம்மால் அப்பா மரணத்திற்கு மகன் பழி வாங்கப் போகிறான் என யூகிக்க முடிகிறது. வினோதினி தன் மகளோடு, தம்பி கௌதம் கார்த்திக்கையும் வழக்கறிஞர்களாக வளர்க்கிறார். சட்டம் முடிக்கும் கௌதம் நிஜமாகவே அநீதிகளை கொஞ்சம் அழுத்தமாக 'அடி'த்துக் கேட்கிறார். ஹீரோயின் மஞ்சிமாவும் கிட்டத்தட்ட அதே கேரக்டர் தான்.
இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, அதனை தனது ஸ்டைலில் தட்டிக் கேட்கிறார் கௌதம். இதில், பலாத்காரம் செய்த இளைஞரோடு, பெப்சி விஜயனின் மகனையும் கௌதம் கொன்று விடுகிறார். பிறகென்ன, மகன் கொலைக்கு பழி வாங்க களத்தில் குதிக்கிறார் பெப்சி விஜயன். தன் அப்பாவைக் கொன்ற பெப்சி விஜயனை கௌதம் கொல்கிறாரா, இல்லை மகனைக் கொன்ற கௌதமை அப்பா பெப்சி விஜயன் கொல்கிறாரா என்பது தான் மீதிக்கதை.