கலாட்டா கல்யாணம் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஹேமல் கோத்தரி எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் 2021 டிசம்பர் 24ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற இணையதள ஆன்லைன் ஓடிடி செயலியில் வெளியாகியுள்ளது.
கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் கதை
பீகாரில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண் சாரா அலி கான். தனது காதலன் அக்ஷய் குமார் உடன் சாரா 21 முறை ஓடிச்செல்ல முயற்சிக்கிறார். சாராவை கட்டுப்படுத்த அவரது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள்.
அந்த ஊருக்கு சுற்று பயணமாக வந்துள்ள தனுஷை கடத்தி சாராவிற்கு கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்த இரண்டு தினங்களில் தனுஷிற்கு அவர் காதலியுடன் நிச்சயம் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் சாராவுடன் நடந்த கட்டாய திருமணம் இவரது வாழ்க்கையை மாற்றுகிறது.
இவர்களின் கட்டாய திருமணம் பற்றி அறிந்து தனுஷின் காதல் திருமணம் நிற்க, சாரா அவர் காதலனின் வருகையை எண்ணி காத்திருக்கிறார். சாராவின் காதலன் அக்ஷய் குமார் வருகை தருகிறார். பின் என்ன நடந்தது? இறுதியில் சாராவின் ஜோடி யார்? என்பதே படத்தின் கதை.