கட்டா குஸ்தி இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளரும், இப்படத்தின் நாயகனுமான விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
அதிரடி, நகைச்சுவை மற்றும் குடும்ப படமாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி கே எடிட்டிங் செய்துள்ளார்.
கட்டா குஸ்தி திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 டிசம்பர் 02ல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது.
கட்டா குஸ்தி திரைப்படத்தின் கதை
கதைக்கரு
பெண்கள் தங்களின் கனவை ஜெயிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தையும் புருஷனையும் ஜெயிக்க நிலையில் உள்ளனர், என்னும் வலிமையான கருத்தை காமெடி கலந்து இயக்குநர் செல்லா அய்யாவு இப்படத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
கதை
பல சண்டைகள் போட்டு ஊருக்குள் ரவுடி போல சுற்றி திரியும் நாயகன் விஷ்ணு விஷால் ஒரு கபடி வீரர். ஊருக்குள் இவரின் சேட்டைகளை கண்டு ஊர் மக்கள் அனைவரும் இவருக்கு பெண் குடுக்க மறுக்கிறார்கள். இதனால் வேறு மாநில பெண்ணான ஐஸ்வர்யா லக்ஷ்மியை பெண் பார்க்க செல்கிறார், விஷ்ணு விஷால்.
ஐஸ்வர்யா லட்சுமி ஒரு குஸ்தி வீராங்கனை ஆவார். குஸ்தியில் இவர் ஆக்ரோஷமாக சண்டை போடுவதை கண்ட ஊர் மக்கள் இவருக்கு திருமணம் ஆகாது என சொல்கிறார்கள். அச்சமயம் ஐஸ்வர்யா லக்ஷ்மியை வெளி ஊரில் இருந்து நாயகன் பெண் பார்க்க வருகிறார்.
இரு வீட்டாரும் பல பொய்களை சொல்லி நாயகன் நாயகிக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்கிறார்கள். குஸ்தி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி குடும்பம், கணவர் என பல தடைகள் இருப்பதை உணர்கிறார்.
இறுதியில் ஐஸ்வர்யா லட்சுமி தனது குடும்பத்தையும் கணவனையும் தாண்டி தனது லட்சியத்தை அடைந்தாரா? மனைவியின் மனதை விஷ்ணு விஷால் புரிந்து கொண்டாரா? என்பது தான் கட்டா குஸ்தி படத்தின் நகைச்சுகை கலந்த அழகான கதை.