குலேபகாவலி கதை

  குலேபகாவலி கதை சொல்ல போறோம் படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா, ஹன்ஷிகா, ரேவதி, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். 

  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு  பாங்காக்கில் நடைபெறவிருக்கிறது. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

  குலேபகாவலி 1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட திரைப்படம். இப்படத்தின் தலைப்பை தான் தற்போது பிரபு தேவா நடிக்கும் படம் கைப்பற்றியுள்ளது.

  கதை :

  1945-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரார்கள் சென்னையை விட்டு வெளியேறும்போது ஒரு துரை, வைரக்கல்கள் அடங்கிய பெட்டியை தமிழர் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வரச் சொல்கிறார். அப்படித் தூக்கி வரும்போது பெட்டி கீழே விழுந்து அதிலிருந்து வைரம் சிதற, அவற்றைக் கமுக்கமாக வேட்டியில் அள்ளிப்போட்டு ஒளித்துவைத்துவிட்டு, வெறும் கல்லை நிரப்பி பெட்டியை துரையிடம் கொடுத்து விடுகிறார். வைரத்தை ஒரு பெட்டியில் வைத்து 'குலேபகாவலி' எனும் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து விடுகிறார் அவர். பின், அவரது குடும்பத்தினர் மெக்ஸிகோவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

  பிரபுதேவாவும், யோகிபாபுவும் மன்சூர் அலிகாலின் சிலை கடத்தல் தொழிலில் உதவி செய்பவர்கள். கிளப் டான்சர் ஹன்சிகா தங்கைக்காக சிறு சிறு,மோசடி செயல்களில் ஈடுபடுபவர். ரேவதி ஒரு மோசடி பேர்வழி. பணக்காரர்களை நூதன முறைகளில் ஏமாற்றி அவர்களது உடைமைகளைத் திருடிவிட்டுத் தப்பிச்செல்பவர். இன்ஸ்பெக்டராக வரும் சத்யன் சிறுவயதிலிருந்து யாரிடமாவது ஏமாந்து கொண்டேயிருக்கும் அப்பாவி. மோசடிப் பேர்வழிகள் அனைவரும் அவரவர் வழிகளில் சென்றுகொண்டிருக்கும்போது இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

  வில்லன் மத்சூதனன் ராவுக்கு 'குலேபகாவலி' எனும் ஊரில் தன் தாத்தா புதைத்து வைத்த பெட்டியைப் பற்றித் தெரிகிறது. இதனால், இந்தியாவுக்கு வரும் அவர் தன் மச்சான் ஆனந்தராஜோடு இணைந்து பெட்டியை எடுக்கத் திட்டமிடுகிறார். வித்தியாசமான மூடநம்பிக்கை கொண்ட மனிதர்கள் வாழும் குலேபகாவலி ஊரின் தலைவர் வேல.ராமமூர்த்தி. அந்தப் பெட்டியை எடுக்க, தங்களிடம் மாட்டிக்கொள்ளும் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் முனீஸ்காந்தை குலேபகாவலிக்கு அனுப்புகிறார்கள் வில்லன் டீம். போகும் வழியிலேயே அந்த பெட்டியை எடுத்து தாங்களே பங்கு போட்டுக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கிறார்கள் பிரபுதேவா குழுவினர்.

  குலேபகாவலிக்கு போகும் வழியில் ரேவதி கொள்ளையடித்து வரும் காரில் ஏறிக்கொள்ள, அவரும் இவர்களது திட்டத்தில் பார்ட்னர் ஆகிறார். இந்த கும்பலை, பிரபுதேவா கடத்திய சிலைகளைத் தேடி மன்சூர் அலிகானும், தங்களை ஏமாற்றிய ரேவதியைத் தேடி மொட்டை ராஜேந்திரன் மற்றும் சத்யன் ஆகியோரும் விரட்டுகிறார்கள். இவர்களைச் சமாளித்து பிரபுதேவா குழுவினர் குலேபகாவலிக்குச் சென்று அந்தப் புதையலை எடுத்தார்களா, அதனால் பலன் பெற்றார்களா, புதையலில் இருக்கும் மர்மம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie குலேபகாவலி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).