ஹரா - இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மைக் மோகன் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கோவை எஸ் பி மோகன்ராஜ் தனது 'JM புரொடக்சன் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'ஹரா' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பரகாத் முனுசாமி, இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ, நாயகன் மோகன் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ மற்றும் குணா இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர்.
ஹரா திரைப்படத்தில் மைக் மோகன் உடன் இணைந்து யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜய்குமார், அனுமோல் என பல தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 2024 ஜூன் 7ல் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
ஹரா திரைப்படத்தின் கதை
(மைக்) மோகனின் மகள் நிமிஷா கோவையில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். தீடிரென மோகனின் மகள் நிமிஷா கல்லூரியில் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் தற்கொலை தான் செய்துகொண்டார் என்பதை ஏற்க மறுக்கும் மோகனின் மனம், இந்த தற்கொலை பற்றி தானே விசாரிக்க தொடங்குகிறார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. மருத்துவ துறையில் நடக்கும் ஊழல் மற்றும் மோசடியில் சிக்கிய தனது மகளை கொன்றுள்ளனர், என்பதை அறியும் மோகன், பின் அதற்கு காரணமான நபர்களை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ஹரா திரைப்படத்தின் கதை.
ஹரா திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்
ஹரா திரைப்படத்தின் இயக்குனரான விஜய் ஸ்ரீ, தமிழ் சினிமாவில் தாதா 87, பவுடர் ஆகிய திரைப்படங்களை இயக்கி அறிமுகமானவர். 80 & 90களில் தமிழ் சினிமாவில் ஆஸ்தான நடிகராக புகழ் பெற்ற மைக் மோகன், பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார், சிறந்த கதைக்களம் மற்றும் நல்ல கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த மைக் மோகன், இப்படத்தினை தேர்வு செய்து நாயகனாக மீண்டும் தமிழ் சினிமாவில் தனது இரண்டாம் இன்னிங்ஸ்யை தொடங்கியுள்ளார்.
வெளியீட்டிற்கு முன்பாக இப்படம் நாங்கள் எதிர்பார்த்தது போல உருவாகியுள்ளது என படக்குழுவினர் பத்திரிகை நண்பர்களுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். இப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு தலத்தில் நடிகை குஷ்பூ நாயகியாக நடித்து வந்தார். பின்னர் அவருக்கு பதில் நடிகை அனுமோல் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் கதை, திரைக்கதை, பாடலாசிரியர், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் என இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.