கண்ணா லட்டு தின்ன ஆசையா மணிகண்டன் தயாரித்து 2013 ல் வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படம். இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங், சேது, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர். இதை சந்தானம், ராம நாராயணனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
கதை:
மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். சிவாவின் (சேது) வீட்டிற்கு எதிரே புதிதாக வரும் வீட்டில் சௌமியா (விசாகா சிங்) உள்ளார். அவரை யார் காதலிப்பது என்பதில் இவர்களுக்குள் போட்டி வருகிறது. யாரை சௌமியா காதலித்தாலும் மற்றவர்கள் அக்காதலை ஏற்றுக்கொள்வது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
சிவா சௌமியாவின் சித்தி கோவை சரளாவிற்கு உதவி சௌமியா மனதில் இடம் பிடிக்க முயலுகிறார். கலியபெருமாள் (சந்தானம்) சௌமியாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக்கொள்ளுகிறேன் என்று சௌமியாவின் வீட்டிற்கு வந்து அவர் மனதில் இடம் பிடிக்க முயலுகிறார். பவர் குமார் (பவர் ஸ்டார் சீனிவாசன்) சௌமியாவின் அப்பாவிடம் நடனம் கற்றுக்கொள்ளுகிறேன் என்று சௌமியாவின் வீட்டிற்கு வந்து அவர் மனதில் இடம் பிடிக்க முயலுகிறார். மூவரும் தங்கள் காதலை சௌமியாவிடம் தெரிவிக்கின்றனர்.
இதனால் குழப்பமடையும் சௌமியா தன் பக்கத்து வீட்டுக்கார மாமியின் (தேவதர்சினி) ஆலோசனைப்படி தான் நடிகர் சிம்புவை காதலிப்பதாக பொய் சொல்கிறார். சௌமியாவின் பிறந்தநாளுக்கு சிம்புவை கொண்டுவர முயல்கிறார்கள். முடிவில் சௌமியா சிவாவை காதலிக்கிறார்.