twitter

    கொலையுதிர் காலம் கதை

    கொலையுதிர் காலம் இயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஆச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோரி கெர்யாக் ஒளிப்பதிவில், திரைப்பட தொகுப்பாளர் ராமேஸ்வர் எஸ். பகத் இப்படத்திற்கு பணியாற்றியுள்ளார்.

    கதை  
    பிறவியிலேயே வாய் பேச முடியாதவர், ஆனால் அபார ஓவிய திறமை கொண்டவர் நயன்தாரா. இந்தியாவில் ஒரு ஆசிரமத்தில் வளரும் அவரை, லண்டனை சேர்ந்த மல்டி மில்லினியர் அபா லான்சன் தத்தெடுக்கிறார். தாய் லண்டன் சென்றுவிட, இந்தியாவில் வளர்கிறார் நயன்.

    ஒருநாள் தனது தத்து தாய் இறந்துவிட, லண்டனுக்கு செல்கிறார் நயன். அங்கு பல்லாயிரம் கோடி சொத்துக்கு உரிமை கொண்டாடி வரும் பூமிகாவும், அவரது கணவரும் நயன்தாராவை மிரட்டுகிறார்கள். எல்லா சொத்துகளையும் தங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு இந்தியா திரும்பிவிட வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

    இந்நிலையில், தனிமையில் இருக்கும் அந்த பங்களா வீட்டில், நயனும், வேலைக்கார பாட்டி ரோகினியும் இருக்கிறார்கள். பிரதாப் போத்தனும் அவர்களுடன் இருக்கிறார். இந்நிலையில் அண்டர்டேக்கர் போல் உடல்வாகு கொண்ட ஒரு மர்ம மனிதன், பிரதாப்போத்தன் மற்றும் ரோகினி பாட்டியை போட்டு தள்ளிவிட்டு நயன்தாராவையும் கொலை செய்ய முயற்சிக்கிறான்.

    அவனிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் ஓடி ஒளிகிறார் நயன். அந்த மர்ம மனிதன் யார்? எதற்காக நயன்தாராவை கொல்லப்பார்க்கிறான்? அந்த மர்ம மனிதனிடம் இருந்து நயன் தப்பித்தாரா? என்பதே கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மிச்ச திரில்லர்.

    சர்ச்சைகள் / விவரங்கள்
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் நயன்தாரா, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் தொடர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தினை தொடர்ந்து நயன்தாரா பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையான கொலையுதிர் கலாம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் படப்பிடிப்பு தொடங்கிய காலம் முதல் பல பிரச்சனைகளை கடந்து வந்துள்ளது. தயாரிப்பாளர் பிரச்சனையில் சிக்கி வெளிவர முடியாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் மதியழகன் தாமாக முன்வந்து இப்படத்தினை வெளியிட முயற்சிகள் எடுத்து வந்துள்ளார்.

    இப்படத்தின் டீஸர் வெளியிட்டு விழாவில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. அச்சமயம் தமிழ் திரையுலக முன்னணி நடிகரான ராதா ரவி-யின் உரையாடலில் நயன்தாராவை விமர்ச்சிப்பது போல் ஒரு சில  வசனங்கள் பேசியதால் ராதா ரவி சர்ச்சைக்கு உள்ளனார்.

    தற்போது பல பிரச்சனைகளை கடந்து இப்படமானது 2019 ஜூன் 14-ல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் மற்றும் விளம்பர பணிகள் தீவீரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தினை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி குமார் (புகழ்: விடியும் முன்) இப்படத்தின் தலைப்பு தன்னுடையது என்ற வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் அடிப்படையில் 2019 ஜூன் 11-ல் அந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதில் இப்படத்தினை வெளியிட தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். இந்நிலையில் இத்திரைப்படத்தினை 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
    **Note:Hey! Would you like to share the story of the movie கொலையுதிர் காலம் with us? Please send it to us ([email protected]).