மாமனிதன் கதை

  மாமனிதன் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சமூக அக்கறை கொண்டுள்ள ஜனரஞ்சகமான குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தானே தயாரித்து, அவரின் தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

  தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் குடும்பங்களோடு ரசித்து மகிழும் படமாக உருவாக்கப்பட்டுள்ள மாமனிதன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

  மாமனிதன் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022, ஜூன் 24ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
  மாமனிதன் படத்தின் கதை

  "அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்" என்கிற ஆழமான அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் படத்தின் கதையே புரிகிறது. 

  அப்படியொரு சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு. 

  அதிகம் படிக்காத விஜய்சேதுபதி அந்த ஊரிலேயே முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக ஆகிறார். ஊரில் நல்ல மனிதன் என்கிற பெயரை எடுக்கும் விஜய்சேதுபதிக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட அதிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மாமனிதன் படத்தின் கதை.

  மாமனிதன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

  இத்திரைப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் நாயகன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படமாகும், மாமனிதன். இப்படத்திற்கு முன்பு தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படங்களில் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

  விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் இறுதியாக வெளியான 'தர்மதுரை' திரைப்படத்தில் தான் இயக்குனர் சீனு ராமசாமி 'மக்கள் செல்வன்' என்ற புனைபெயரினை விஜய் சேதுபதிக்கு சூட்டியுள்ளார்.

  மாமனிதன் படத்தினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் வெளியிட்டு நேரத்தில் பல பிரச்சனைகள் கிளம்ப பல போராட்டங்களுக்கு பின்னர் இப்படத்தினை 2022, ஜூன் 24ல் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார், யுவன்.

  மாமனிதன் படத்தில் நாயகியாக நடித்துள்ள காயத்திரி ஷங்கர், விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை ஆவார். காயத்திரி ஷங்கர் - விஜய் சேதுபதி இணைந்து புரியாத புதிர், துக்ளக் தர்பார், விக்ரம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
   
  மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு 2018 டிசம்பர் 15ல் மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. மதுரை, ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடித்தியுள்ள படக்குழு, பின் 23 ஜனவரி 2019ல் கேரளாவில் சில காட்சிகள் படமாக்கி, இறுதியாக வர்ணாசி சென்று சில காட்சிகளை எடுத்த படக்குழு 2019 பிப் 12ல் படத்தின் படிப்பிடிப்பை முழுவதுமாக முடித்துள்ளனர்.

  படப்பிடிப்பு நிறைவேறிய அறிவிப்போடு மாமனிதன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டது. மொத்தம் 60 நாட்களில் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. 
  **Note:Hey! Would you like to share the story of the movie மாமனிதன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).