மாநாடு கதை

  மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம் ஜி, எஸ்.ஜே.சூர்யா என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அரசியல் மற்றும் அறிவியல் புனைவு சார்ந்த அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  அரசியல் சார்ந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்டன்ட் சில்வா (சண்டைப் பயிற்சியாளர்), சேகர் (கலை இயக்குனர்), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பாளர்), டியூனி ஜான் (டிசைனர்) மற்றும் ஜான் (மக்கள் தொடர்பாளர்) என பல தொழிநுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

  மாநாடு திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ரிலீஸ்க்கு தயாராகி ஒரு வழியாக 2021 நவம்பர் 25ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
  மாநாடு திரைப்படத்தின் கதை

  கதைக்கரு: தமிழக முதலமைச்சர் (எஸ் ஏ சந்திரசேகர்) அவர்களால் பாதிக்கப்படும் சிலர், முதல்வரை ஒரு மாநாட்டின் போது கொலை செய்ய திட்டமிடுகின்றனர். முதல்வரை கொலை செய்யும் அந்த ஒரு நாள், நாயகன் சிலம்பரசனுக்கு மீண்டும் மீண்டும் (டைம் லூப்) நடக்கிறது. அதில் இருந்து நாயகன் எவ்வாறு தப்பித்தார்? என்பதே கதை.

  கதை

  தனது நண்பன் பிரேம் ஜி காதலித்த அவரது காதலியின் திருமணத்தை நிறுத்தி மணப் பெண்ணை கடத்தி பிரேம் ஜி உடன் சேர்த்து வைக்க துபாயில் இருந்து கோவைக்கு வரும் சிலம்பரசன், ஊட்டியில் நடக்கும் திருமணத்தில் இருந்து திட்டமிட்டபடி மணப் பெண்ணை கடத்துகிறார். 

  மணப் பெண்ணை கடத்தி ஊட்டியில் இருந்து கோவைக்கு வரும் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். அச்சமயம் எஸ். ஜே. சூர்யா, இவர்கள் அனைவரையும் கைது செய்கிறார். சிலம்பரசனின் நண்பர்களை பணயமாக வைத்து, கோவையில் நடக்கும் மாநாட்டில் முதலமைச்சரை கொலை செய்ய வேண்டும் என சிலம்பரசனை மிரட்டுகிறார், எஸ். ஜே. சூர்யா.

  தனது நண்பர்களுக்காக முதலமைச்சர் எஸ். ஏ. சந்திரசேகரை மாநாட்டில் கொலை செய்கிறார், சிம்பு. பின்னர் காவலர்கள் சிலம்பரசனை மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுடுகின்றனர். 

  தீடிரென சிலம்பரசன் விமானத்தில் கண் விழித்து பார்க்கிறார். கோவை விமான நிலையத்தில் இவர் சந்தித்த அதே நிகழ்வுகள் நடக்கிறது. டைம் லூப் எனப்படும் ஒரு விசித்திர சூழ்ச்சியில் சிக்கியுள்ள சிலம்பரசன், அதில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.

  மாநாடு படத்தின் பிரத்யேக தகவல்கள்

  மாநாடு படத்தில் சிலம்பரசன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை தொடர்ந்து இப்படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுமான பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா என திரையுலக அனுபவமுடைய பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

  சிலம்பரசனின் திரைப்பயணத்தில் இப்படத்தின் மூலம் இவர் முதன் முதலில் ஒரு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கான பெயர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆலோசனை நடந்து தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் இஸ்லாமிய இளைஞனாக "அப்துல் காலிக்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின்னர் இவரின் பெயர் இஸ்லாமிய பெயராக மாற்றப்பட்டது. யுவனின் இஸ்லாமிய பெயரான "அப்துல் காலிக்" என்ற பெயரில் சிலம்பரசன் இப்படத்தில் நடித்துள்ளார்.

  மாநாடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020 பிப்ரவரி மாதம் 19ல் தொடங்கவுள்ளது என இப்படத்தின் படக்குழு இணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  மாநாடு படத்தின் பிரச்சனைகள்

  மாநாடு திரைப்படம் 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 8.8.2019-ஆம் ஆண்டு வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் இருந்ததில் சற்று கோவப்பட்டுள்ள படக்குழு ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

  அதாவாவது இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக "இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கவிருந்த திரைப்படம் மாநாடு, தற்போது கை-விடப்படுகிறது" -என்று ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். "இத்திரைப்படம் வெங்கட் பிரபு இயக்க, எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்". என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

  சிலம்பரசனின் கால்ஷீட் காரணமே இந்த பிரச்சனைக்கு காரணம். பின்னர் பல பிரபலங்கள் மற்றும் சிம்புவின் பெற்றோர் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்துள்ளனர்.

  பல போராட்டங்கள் நடந்த பின்னரே இப்படத்தின் படப்பிடிப்பு சுமுகமாக நடந்துள்ளது. ஆனால் இப்படம் வெளியீட்டு நேரத்தில் யாரும் அறியப்படாத புதுவிதமான பல பிரச்சனைகள் கிளம்பியது. சிம்புவின் முந்திய பட தயாரிப்பாளர்கள் இப்படத்தினை வெளியிட பிரச்சனைகள் செய்துள்ளனர், அதனால் 2021 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்த இப்படம், 2021 நவம்பர் 25ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

  **Note:Hey! Would you like to share the story of the movie மாநாடு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).